தேசிய முன்னனியை வலுப்படுத்த அதன் கொள்கை மறுஆய்வு செய்யப்பட வேண்டும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து

தேசிய முன்னனியை வலுப்படுத்த அதன்  கொள்கை மறுஆய்வு செய்யப்பட வேண்டும்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.3-
             தேசிய முன்னனியை வலுப்படுத்த வேண்டுமானால் அதன் கொள்கை மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
           பல இன மக்கள் சார்ந்த கட்சிகளை உறுப்புக் கடைசியாகக் கொண்டுள்ள தேசிய முன்னனி கொண்டிருக்கும் கொள்கை நடைமுறை தற்போதைய சூழலுக்கு ஒத்துவராது. அதேநேரத்தில் மற்ற உறுப்புக் கட்சிகளின் கொள்கையும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
           தேசிய முன்னனியை வலுப்படுத்த பல பலவீனங்கள் களையப்பட வேண்டியுள்ளது. தேசிய முன்னனியை புதிய தோற்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று என்.எஸ்.டி ஆங்கில நாளேட்டிற்கு வழங்கிய செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு சொன்னார்.
           தேசிய முன்னனி அரசு சாரா இயக்கங்களை ஒரு ஆதரவாளராக வைத்துக் கொள்ள வேண்டும். அரசு சாரா இயக்கங்களை அறவே ஒதுக்கிவிடக்கூடாது. அதேநேரத்தில் உறுப்புக் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.
            கடந்த 1997இல் டத்தோஸ்ரீ அன்வார் மற்றும் துன் மகாதீர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் கடைசி வரையில் களையப்படவில்லை. இதனால் தேசிய முன்னனி இன்று பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இச்சூழலில் மஇகா, மசீச உள்ளிட்ட பல கட்சிகள் பாதிக்கப்பட்டதாக டான்ஸ்ரீ  விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
             தேர்தலில் போட்டியிடும் இடங்கள், வேட்பாளர்கள் தேர்விலும் நாம் நமது கடமையை நிலைநாட்டவில்லை. நாம் போட்டியிடுவது வாக்காளர்களின் ஆதரவை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக நாம் போட்டியிடும் ஒரு தொகுதிக்கு நாம் தகுதியானவரா என்பதையும் கண்டறிந்திருக்க வேண்டும் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.
           தேசிய முன்னனியை ஒரு கூட்டணி கட்சியாக கொண்டு வர வேண்டும். அப்போதுதான்  அது தேசிய முன்னனியின் கடந்த கால போராட்டங்களை வெளிப்படுத்தும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
           தேசிய முன்னனியை மறுதோற்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அம்னோ மாநாட்டில் உரையாற்றி அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறிய கருத்து தொடர்பில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு கருத்துரைத்தார்.

Comments