14ஆண்டுக் காலத் தொடர் முயற்சியில் வரலாற்று முத்திரை: மலேசியச் சிறுகதைகள் தமிழ் நாட்டில் பாடப் புத்தகமாக அங்கீகாரம் கோவை, நேரு கலை, அறிவியல் கல்லூரி- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

14ஆண்டுக் காலத் தொடர் முயற்சியில் வரலாற்று முத்திரை:
மலேசியச் சிறுகதைகள்
தமிழ் நாட்டில் பாடப் புத்தகமாக
அங்கீகாரம் 
கோவை, நேரு கலை, அறிவியல் கல்லூரி-  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஜன.1-     
       மலேசியத் தமிழ் இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் தமிழகத்தில் அறிமுகம் செய்ய மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மேற்கொண்டு வந்த தொடர் முயற்சி மாபெரும் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

தமிழ்நாடு, கோவை, ஸ்ரீ நேரு மகா வித்தியாலய கலை, அறிவியல் கல்லூரியில், மலேசியத் தமிழ் சிறுகதைகள் தனிநூலாக தொகுக்கப்பட்டு, அது பாட நூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகப் படைப்பாளர்களையும் அவர்களது படைப்புகளையும் நாம் அறிந்து வைத்துள்ள அளவிற்கு நமது படைப்பாளர்களையும் படைப்புகளையும் தமிழக மக்கள் அறிந்து வைத்திருப்பதில்லை என்ற நீண்ட காலக் குறையை நீக்கும் பொருட்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழகத்தில் அறிமுகம் செய்ய 2004ஆம் ஆண்டு முதல் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மலேசியத் தமிழ்  எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் தலைமையில், மலேசிய எழுத்தாளர்கள் குழு தமிழகத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்து வந்தனர்.

அதற்காக பல்வேறு கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தி வந்துள்ளது
அந்தப் பெரும் முயற்சிகளின் பயனாக அண்மையில் (13.12.2018) கோவை ஸ்ரீ நேரு மகா வித்யாலய கலை, அறிவியல் கல்லூரியில், மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் பாட நூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நம் நாட்டின் முத்திரை எழுத்தாளர்களான திருமதி பாவை, திரு. கோ. புண்ணியவான், திரு. நிலாவண்ணன், திரு. மு. கருணாகரன், திரு. ஜி. எஸ். தேவகுமார், திரு. மு. வரதராசீ, திரு. மு. மணிவண்ணன், திருமதி உதயகுமாரி கிருஷ்ணன், திரு. சித. நாராயணன், ஆகியோரின் சிறுகதைகள் அந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

அச்சு ஊடகங்களில் வெளிவரும் சிறுகதைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றிலிருந்து இருபது கதைகளைத் தேர்வு செய்து பரிசளிப்பதோடு அந்தக் கதைகளை சங்கம் நூலாகவும் தொகுத்து வருகிறது.

அந்த நூல்கள் கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  அவற்றில்  ஆகக் கடைசியாக  வெளிவந்த இரண்டு நூல்களிலிருந்து சிறந்த 10 கதைகளைத் தேர்வு செய்து தங்களது மாணவர்களுக்கு அயல்நாட்டுத் தமிழ் இலக்கியப் பாடப் புத்தகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் மோகனன் பெருமாள்- கல்லூரியின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் பவ்னா ஆகியோர் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அவர்களுடன் கல்லூரி நிர்வாகச் செயலாளர் ஸ்ரீ பரத்குமார் ஜக்கமானி, முதல்வர் டாக்டர் பி. சுப்பிரமணி, தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தனலெட்சீமி, மலேசியத் தமிழ் எழுத்ததாளர் சங்கப் பொருளாளர் சைமன் ஞானமுத்து, திருமதி இராஜம் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2004ஆம் ஆண்டிலிருந்து சங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியினால் தமிழகத்தின் பல கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் சிலரது படைப்புகள் பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றன.
முழு பாட நூலாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக தேர்வு செய்யப்பட்ட பத்துச் சிறுகதைகளைத் தனி நூலாக அச்சிட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்வது இதுவே முதன் முறையாகும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியான இக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை கல்வி பயில்கிறார்கள்
இந்தக் கல்லூரியில் அயலக இலக்கியம் என்னும் ரீதியில் இந்தப் பத்துக் கதைகளும் பாட நூலாக அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் அந்தக் கல்லூரிக்கு வருகை அளித்த எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரனுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சு நடத்தியபோது இந்தத் திட்டத்திற்கான முன்வரைவுகள் விவாதிக்கப்பட்டன.

முதல் கட்டமாக நூல்களை அச்சிட்டு, வழங்கும் செலவுகளுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் ங்ங்கம் ஏற்பாடு செய்ய இணக்கம் காணப்பட்டது.

மலேசிய இலக்கியத்தைப் பயிலும் மாணவர்களைக் கொண்டு மன்றம் அமைக்கப் படும். அந்த மன்றத்தின் மூலம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு ஙெ்ய்யப்பட்டுள்ளது.

கள ஆய்வுக்காக மாணவர்களும் பேராசிரியர்களும் மலேசியாவிற்கு வருகை புரியும் திட்டமும் உண்டு. இத்தகைய அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாட நூலில் இருக்கும் பத்துக் கதைகளை எழுதியவர்களில் திருமதி பாவை, கோ. புண்ணிய வான், நிலாவண்ணன், எம். கருணாகரன், எஸ். ஜி. தேவகுமார் ஆகிய ஐவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் குறித்து மாணவர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் நேரடியாக பதிலளிக்கும் அங்கம் இடம் பெற்றது.

Comments