பிடி 3, எஸ்பிஎம் தேர்வில் தெலுங்கு மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும்! டத்தோ அச்சயகுமார் கல்வி அமைச்சுக்கு கோரிக்கை

பிடி 3, எஸ்பிஎம் தேர்வில் தெலுங்கு மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும்!
டத்தோ அச்சயகுமார் கல்வி அமைச்சுக்கு கோரிக்கை

செய்தி: 
குணாளன் மணியம்
படங்கள் : ஹரிஸ்ரீநிவாஸ்

ரவாங், டிச.19-
பிடி 3, எஸ்.பி.எம் தேர்வில் தெலுங்கு மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் அச்சயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் எஸ்ஆர்பி, எஸ்பிஎம் தேர்வில் தெலுங்கு மொழி ஒரு பாடமாக இருந்தது. ஆனால், ஏதோ காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.

ஆனால், பஞ்சாபி மொழி இன்னமும் தேர்வில் ஒரு பாடமாக இருந்து வருகிறது. ஆகையால், தெலுங்கு மொழியை பிடி 3, எஸ்பிஎம் தேர்வில் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று  தெலுங்கு சங்க கட்டடத்திற்கு வருகை மேற்கொண்ட கல்வி அமைச்சின் அதிகாரி டாக்டர் குமரவேலுவிடம் டத்தோ அச்சயகுமார் அக்கோரிக்கையை முன்வைத்தார்.
ரவாங், சுங்கை சோ அருகில் உள்ள மலேசிய தெலுங்கு சங்கத்தின் புதிய, சொந்த கட்டடத்தில் நடத்தப்பட்டு வரும் தெலுங்கு வகுப்புகள், மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள், தெலுங்கு சங்கத்தின் நடவடிக்கைகள் ஆகியவற்றை  நேரில் காண டிசம்பர் 19 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு  வருகை தந்த கல்வி அமைச்சின் அதிகாரி டாக்டர் குமரவேலுவிடம் சங்கத்தின் கோரிக்கையை முன் வைத்தார் டாக்டர் அச்சயகுமார்.

'நாங்கள் இல்லாத ஒன்றை கேட்கவில்லை. கடந்த 1984 வரைக்கும் எஸ்ஆர்பி, எஸ்பிஎம் தேர்வில் தெலுங்கு மொழி ஒரு பாடமாக இருந்தது. அதன் பிறகு சில காரணங்களால் அது தேர்வு பாடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அப்போது தொடங்கி நாங்கள் கடந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள், கல்வி அமைச்சு, அமைச்சர்கள், பிரதமர் வரை சென்று முறையிட்டோம். அதனை அமல்படுத்த தடையேதும் இல்லை என்றார்கள். ஆனால், ஏதோ காரணத்தினால் அதனை  இன்னும் அமல்படுத்த முடியாமல் இருக்கிறது. இப்போது இருக்கும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அதனை அமல்படுத்த வேண்டும். இதுகுறித்து கல்வி அமைச்சில் கேட்ட போது முடியும் என்றார்கள். ஆனால், அது இன்னும் சுணக்கமாகவே உள்ளது என்றார் டத்தோ அச்சயகுமார்.
     
நூற்றுக்கணக்கான தெலுங்கு பிள்ளைகள்  தமிழ்ப்பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தெலுங்கு மொழி படிக்க வாய்ப்பு கிடைத்தால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன்வழி தமிழ்ப்பள்ளியை பலப்படுத்த முடியும். தெலுங்கு மொழியை ஒரு தேர்வு பாடமாக மட்டுமே அமல்படுத்த கேட்பதாக டத்தோ டாக்டர் அச்சயகுமார் குறிப்பிட்டார்.

Comments