செடிக் எனப்படும் இந்தியர் சமூகவியல், பொருளாதார திட்டம் கல்வியை கைவிட்டவர்கள், பி40 பிரிவினர், தனித்து வாழும் தாய்மார்கள், வேலை செய்பவர்கள் ஆகியோருக்குப் பயனளிக்க வேண்டும்! தொழில்திறன் பயிற்சி மையங்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வேண்டுகோள்

செடிக் எனப்படும் இந்தியர் சமூகவியல், பொருளாதார திட்டம் கல்வியை கைவிட்டவர்கள், பி40 பிரிவினர், தனித்து வாழும் தாய்மார்கள், வேலை செய்பவர்கள்  ஆகியோருக்குப் பயனளிக்க வேண்டும்!
தொழில்திறன் பயிற்சி மையங்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வேண்டுகோள்

குணாளன் மணியம்

கிள்ளான், டிச.4-
            செடிக் எனப்படும் இந்தியர் சமூகவியல் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்   கல்வியை கைவிட்டவர்கள், பி40 பிரிவினர், தனித்து வாழும் தாய்மார்கள், வேலை செய்பவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும்  பயன்பெறும் வகையில்  வடிவமைக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் தொழில்திறன் பயிற்சி மையங்கள் சங்கத் தலைவர்  ஐயப்பன் முனியாண்டி ஆலோசனை கூறியுள்ளார்.
          இந்நாட்டில் இந்தியர்கள் மத்தியில்  பிரச்சினை உள்ள பிரிவினராக இருப்பது எஸ்பிஎம்மில் குறைவான தேர்ச்சி பெற்றவர்கள்,  கல்வியை பாதியில் கைவிட்டவர்கள், பி40 பிரிவினர், தனித்து வாழும் தாய்மார்கள், வேலை செய்து கொண்டு சான்றிதழ் பயிற்சி பெற விரும்புகிறவர்கள், வேலை இல்லாத இளைஞர்கள் ஆகிய பிரிவினர்தான்.


இத்திட்டம்  இவர்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் தொழில்திறன் பயிற்சி மையங்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி தெரிவித்தார்.
        இந்த செடிக் திட்டம் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் மறு
ஆய்வு செய்யப்பட்டு வருவதால் அது மேற்கண்ட அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும்.


இதில் மேற்பட்டவர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படுவதன் வழி செடிக் திட்டம் முழுமை பெறுவதோடு இலக்கை அடைந்து மக்கள் ஆதரவை பெறும் என்று ஐயப்பன் முனியாண்டி சொன்னார்.
          எஸ்பிஎம் தேர்வில் குறைவான  தேர்ச்சிப் பெற்றவர்கள்,  கல்வியை  பாதியில் கைவிட்ட  இளைஞர்களுக்கு  3 மாதகால  தொழில்திறன் பயிற்சியை வழங்க வேண்டும்.


அதன்பிறகு அவர்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வேலைக்கு அனுப்பி பயிற்சி பெற செய்து அதன்பிறகு நன்சான்றிதழ் வழங்கினால் அவர்கள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட வேலையில். ஆர்வம் காட்டுவார்கள். அதைவிடுத்து  3 மாதகால பயிற்சி மட்டும் வழங்கி விட்டு அவர்களுக்கு வேலை பயிற்சி வழங்காவிடில் அவர்கள் அந்த பயிற்சிக்கான வேலையை தொடரமாட்டார்கள் என்றார் ஐயப்பன் முனியாண்டி.
         இந்நாட்டு இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த இளைஞர்கள் திட்டம் மிகவும் முக்கியம். தேசிய முன்னனி  அரசாங்கம் அமல்படுத்திய இத்திட்டம் மேற்கண்ட பி40, கல்வியை கைவிட்ட மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், வேலை செய்து கொண்டு வேலை தொடர்பான பயிற்சி மேற்கொள்ள விரும்புகிறவர்களுக்கு பயன்தரும் வகையில் அமைய வேண்டும்.
          இத்திட்டம் பி40, தனித்து வாழும் தாய்மார்களுக்கு துணை புரிய வேண்டும். இதில் குறிப்பாக இத்தகையவர்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு உட்பட்ட பேஸ்டரி, பேக்கிரி, கணினி பழுது பார்த்தல், அலங்காரம், சமையல் போன்ற  துறைகளில் பயிற்சி வழங்க வேண்டும்.  இப்பயிற்சியின் வழி அவர்கள் சிறுதொழில் மேற்கொள்ள முடியும் என்று ஐயப்பன் முனியாண்டி குறிப்பிட்டார்.
            அதேநேரத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேலை தொடர்பான பயிற்சியை வழங்க வேண்டும். இதன்வழி அவர்கள் தங்கள் தொழில்திறனை மேம்படுத்தி தங்கள் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். இத்தகைய திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படுவதன் வழி
சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வாய்ப்பு ஏற்படும் என்று ஐயப்பன் முனியாண்டி சொன்னார்.
        செடிக் திட்டம் அடிமட்ட இந்தியர்களுக்கு  வழிகாட்ட வேண்டும்.  அமைச்சர் வேதமூர்த்தி தலைமையிலான செடிக் நிர்வாகம் அதற்கு ஒளியேற்ற வேண்டும். இன்றைய வாழ்க்கை சூழலில் வருமானம் என்பது மிகவும் அவசியமானது. ஒரு தொழிலில் ஈடுப்பட்டு நிரந்தர வருமானம் ஈட்டுவதற்கு மேற்கண்ட திட்டங்கள் வகை செய்யும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
          ஒரு இளைஞரை நிரந்தரமான தொழிலில் ஈடுப்பட வைத்து அவரை நிரந்தரமான வருமான பெறும் தகுதிக்கு உயர்த்த தற்போதைய செடிக் வழிவகை செய்ய வேண்டும். இந்திய இளைஞர்களை வாழக்கையில் பிடிமானம் உள்ளவர்களாக உருவாக்குவதில் அது முனைப்பு காட்ட வேண்டும்.
பி 40 – வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழ்பவர்களையும், குறைந்த வருமானம் பெறும் மக்களையும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமாலும், பராமரிக்க முடியாமலும் பரிதவித்துக் கொண்டிருக்கும் தனித்து வாழும் தாய்மார்களையும் செடிக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
          ஒரு தொழில் நிறுவனத்தில் 10 அல்லது 15 ஆண்டுகள் வேலை செய்பவர்கள் அந்நிறுவனத்தின் வளர்ச்சிகேற்ப முறையான தொழில் பயிற்சிகள் பெறாததால் பின் தங்கி விடுகின்றனர்.
கூடுதல் பயிற்சி பெற்று அதற்கான சான்றிதழ் இருந்தால் அவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். பெரும்பாலான இந்தியர்கள் முறையான தொழில் பயிற்சி இல்லாததால் கூடுதல் நேர வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தையே கடந்த 10, 15 ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு செடிக் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் பயிற்சித்  திட்டங்கள் பலனளிக்கும் என்று ஐயப்பன் முனியாண்டி உறுதியாகக் கூறினார்.
           ஆகையால், அமைச்சர் வேதமூர்த்தி தலைமையிலான செடிக் நிர்வாகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இளைஞர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், பள்ளி படிப்பை கைவிட்டவர்கள் என்று பலரது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று ஐயப்பன் முனியாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments