நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இந்துவுக்கும் 'இந்து அடையாள அட்டை'! தலைவர் பதவி வேட்பாளர் ராமநாதன் கோவிந்தன் கொள்கை அறிக்கை

நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இந்துவுக்கும் 'இந்து அடையாள அட்டை'!
தலைவர் பதவி வேட்பாளர் ராமநாதன் கோவிந்தன் கொள்கை அறிக்கை

குணாளன் மணியம்


கோலாலம்பூர், டிச.14-
          இந்நாட்டில் குடியிருக்கும் ஒவ்வோர் இந்துவுக்கும் 'இந்து அடையாள அட்டை' வழங்கப்படும்  என்று தலைவர் பதவி வேட்பாளர்  ராமநாதன் கோவிந்தன் தமது தர்ம யுத்தம் அணியின் கொள்கை அறிக்கையில் கூறியுள்ளார்.
மலேசியாவில் இருக்கும்  ஒவ்வொரு இந்துவுக்கும் இந்து அடையாளம் மிகவும் முக்கியம் என்பதால் இந்து அடையாள அட்டையை வழங்க தர்ம யுத்தம் அணி முடிவு செய்துள்ளது. சங்கத்தின் தலைமைத்துவ பொறுப்பை ஏற்க வாய்ப்பு வழங்கப்பட்டால் உடனடியாக 'இந்து  அடையாள அட்டை' வழங்கப்படும் என்று  சங்க உறுப்பினரான தர்மயுத்தம் அணியில் மோகன் ஷாணை எதிர்த்துப் போட்டியிடும் தலைவர் பதவி வேட்பாளர் ராமநாதன் கோவிந்தம் தேசம் வலைத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவ்வாறு தெரிவித்தார்.

          இந்த 'இந்து அடையாள  அட்டையின் வழி இந்துக்கள் ஏதாவது ஒரு காரணத்தினால் மதம் மாறினால் அல்லது மதம் மாற்றப்பட்டால் மலேசிய இந்து சங்கத்துடன் தொடர்பு கொண்டு 'இந்து  அடையாள அட்டையை' ரத்து செய்த பிறகுதான் அரசாங்கம் அந்த மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுகுறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்படும் என்று ராமநாதன் கோவிந்தன் சொன்னார்.
          மலேசியாவில் இந்துக்கள் எதிர்நோக்கி வரும் மதமாற்றுப் பிரச்சினைகளுக்கு 'இந்து  அடையாள அட்டை' ஒரு தீர்வாக அமையும் என்று தாம் நம்புவதாக ராமநாதன் குறிப்பிட்டார்.
        இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கோவில்கள், இதர அமைப்புகளுடன் இணைந்து சிறந்த தீர்வு காண வழிவகை ஆராயப்படும். இந்துக்களின் எதிர்காலப் பிரச்சினைகள், கோவில் பிரச்சினைகள், மதமாற்று பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு 'நிலையான செயல்பாட்டு வழிமுறைகள்' உருவாக்கப்பட்டு அதனை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து முறையாக செயல்படுத்த வலியுறுத்தப்படும் என்றார் ராமநாதன்.
            இந்து சங்கத்தின் அனைத்து கொள்முதல்கள், அச்சு வேலைகள்  ஆராயப்பட்டு அது சுயேட்சை கொள்முதல் குழுவிடம் ஒப்படைக்கப்படும். அக்குழு குத்தகை அடிப்படையில் தகுதியானவர்களிடம் அதனை வழங்கும்.
          மலேசிய இந்து சங்கத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகள், சேவைகளை கண்காணிக்க 'சுயேட்டை சேவை கண்காணிப்பு வாரியம்' அமைத்து அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படும். இதன்வழி சுயநலப் போக்கு நீக்கம் பெறும் என்று ராமநாதன் குறிப்பிட்டார்.
         மலேசிய இந்து சங்கத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவது, செயற்குழு உறுப்பினர்களின் பதவி காலத்தை 6 ஆண்டுகளாக கட்டுப்படுத்துவது, செயற்குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் என்ன என்பதை அதிகாரப்பூர்வ கடிதம் வழி தெரிவிப்பது, இந்து பெருநாட்களுக்கு பொது விடுமுறை கோருவது, இந்து சமயம் சார்ரந்த போட்டிகள் நடத்துவது, இந்து சமய போதனை நடத்துவது, சங்க மையங்களில் பதிவு திருமணம் நடத்துவது, இந்திய இளைஞர்கள், மாணவர்கள் வழிதவறிச் செல்லாமல் இருக்க தன்முனைப்பு பயிற்சிகள் நடத்துவது, சிறைக் கைதிகள் புனர்வாழ்வு பயிற்சிகள் நடத்துவது, இந்துக்கள் பிரச்சினைகளுக்கு இந்து சட்ட ஆலோசனை குழு அமைப்பது உள்ளிட்ட பல திட்டங்களை அமல்படுத்த தர்ம யுத்தம் குழு தயாராகி விட்டதாக ராமநாதன் தெளிவுபடுத்தினார்.
         மலேசிய இந்து சங்கத்தில் மேற்காணும் மாற்றங்கள் நிகழ வேண்டுமானால் நாளை டிசம்பர் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சன்வே ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் மலேசிய இந்து சங்கத் தேர்தலில் தங்கள் தர்மயுத்தம் அணியை  வெற்றி  பெறச் செய்ய வேண்டும் என்று தலைவர் வேட்பாளர் ராமநாதன் கோவிந்தன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறிப்பு : இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தலைவர் பதவி வேட்பாளர் ராமநாதன் கோவிந்தனை சார்ந்ததாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments