முகமட் அடிப் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கிறோம் அமைச்சர் பொன். வேதமூர்த்தி இரங்கல்

முகமட் அடிப் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்
அமைச்சர் பொன். வேதமூர்த்தி இரங்கல்

கோலாலம்பூர், டிச.18-
       மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் துயர்மிகு மறைவால் வாடியிருக்கும் அவரின் குடும்பத்தாரின் துயரில் பங்கு கொள்வதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
       மீண்டு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமட் அடிப் மறைந்துவிட்ட இந்த சோதனையான நேரத்தில் அன்னாரின் குடும்பம் எதிர்கொண்டுள்ள மீளாத் துயரில்  நாடும் இணைந்து கொள்கிறது என்றார் வேதமூர்த்தி.
       அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டிற்கு சேவை ஆற்றிய முகமட் அடிப், தீரமிக்க தீயணைப்பு வீரராகத் திகழ்ந்தார். அப்படிப்பட்டவரின் மரணம் தொடர்பில் தீங்கிழைத்தவர்களை அடையாளம் காண்பதில் தீவிரமாகவும் இடைவிடாமலும்  கடமை ஆற்றிய காவல் துறையினர், சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தினர்.
முகமட்  அடிப்பின் ஆத்மா சாந்தி அடையவும் சொர்க்கத்தில் இளைப்பாறவும் வேண்டி மலேசியர் அனைவரும் பிரார்த்திக்கும்படி தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் என்னும் வகையில் அனைவரையும் பரிவுடன் கேட்டுக் கொள்வதாக முகமட் அடிப் மறைவின் தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
     கடந்த அறுபது ஆண்டுகளாக நாட்டு மக்கள் பேணி வரும் ஒற்றுமை உணர்வென்னும் நூலிழையால்தான் பல்லின சமுதாய ஆடை பின்னப்பட்டு உள்ளது என்னும் உண்மையை ஒவ்வொரு மலேசியரும் எண்ணிப் பார்க்க வேண்டிய தருணமிது என்று அவர் மேலும் சொன்னார்.

Comments