சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் அதேஇடத்தில் நிலைபெற அதிகாரமுள்ள நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பாடுபட வேண்டும்! பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்து

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் அதேஇடத்தில் நிலைபெற அதிகாரமுள்ள  நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பாடுபட வேண்டும்!
பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்து

      (ஹரிஸ்ரீநிவாஸ்)

  கோலாலம்பூர், டிச.4- 
        சீபீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்த தாக்குதலில் மன நிம்மதி இழந்திருக்கும் இந்துக்களின் மனதை குளிர வைக்க அந்த  ஆலயம் அதே இடத்தில்  நிலைபெற வேண்டும் என்று மஇகா செலாயாங் தொகுதி இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பிரசாத் சந்திரசேகரன் கூறினார்.
          இந்த ஆலய விவகாரத்திற்கு ஒரு தீர்வு பிறக்க வேண்டும். இதில் குறிப்பாக நம்பிக்கை கூட்டணி அமைச்சர்கள்,  சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஆலயத்தை காப்பாற்ற வேண்டும் என்று பிரசாத் கேட்டுக் கொண்டார்.
       சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை ஓன் சிட்டி மேம்பாட்டு  நிறுவனமிடமிருந்து வாங்குவதற்கு நிதித்திட்டம் ஒன்றை தொழிலதிபர் வின்சன் டான் தி சன் பத்திரிகை வழி 5 லட்சம் நன்கொடை வழங்கி தொடங்கியிருக்கிறார். இந்நிதிக்கு எம்சிடி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பெரி கோ 5 லட்சம் வெள்ளியும் டத்தோ ஆனந்த் குமார் அழகு  5 லட்சம் வெள்ளியும் வழங்கியுள்ளனர். இந்நிதிக்கு இதுவரையில் 20 லட்சம் வெள்ளி திரட்டப்பட்டுள்ளதால் ஆலய நிலத்தை  வழங்க முடியும் என்று பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார்.
           எது எப்படியிருந்தாலும் 147 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலைநிறுத்த அனைவருக்கும் கடப்பாடு இருக்கிறது. மஇகா சார்பில் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் மூலம் தொடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கு ஜனவரி 11ஆம் நாள் விசாரணக்கு வருகிறது. இதுவும் நமக்கு வெற்றியே. இதற்காக மஇகா தேசியத் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களை பாராட்ட வேண்டும் என்று பிரசாத் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
         கடந்த நவம்பர் 26இல் சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன்  ஆலயத்தில் கடும் தாக்குதல் நடந்தது. இதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆலய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments