சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் குண்டர்கள் புகுந்து அட்டகாசம் செய்ததை காவல் துறை தாமதமாக கையாண்டது குறித்து கேள்வி எழுப்பியது தவறா? மக்கள், தலைவர்கள் கேள்வி

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் குண்டர்கள் புகுந்து அட்டகாசம் செய்ததை காவல் துறை தாமதமாக கையாண்டது குறித்து கேள்வி எழுப்பியது தவறா?
மக்கள், தலைவர்கள் கேள்வி
         
கோலாலம்பூர், டிச.24-   
   சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் அதிகாலையில குண்டர்கள் புகுந்து பக்தர்களை தாக்கி அராஜகம் புரிந்த நிலையில் காவல் துறை அதனை இரண்டு மணி நேரம் கழித்து கையாண்டதை கேள்வி எழுப்பிய வேதமூர்த்தி பதவி விலக வேண்டுமா என்று மக்கள் மற்றும் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் காவல் துறை இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தனர் என்பதை இந்த நாடே அறியும் பட்சத்தில் அதுகுறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர் வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்று தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆலயத் தாக்குதல் மறக்கப்பட்டு அதன் பிறகு நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு வேதமூர்த்தியை காரணம் காட்டி பதவி விலகச் சொல்வது நியாயமல்ல.

 ஹிண்ட்ராப் போராட்டத்தின் வழி இந்திய சமுதாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருந்த பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி ஏன் பதவி விலக வேண்டும்?
அவர் என்ன தவறு செய்தார் என்று மக்கள் பரவலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முகமட் அடிப் மரணத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று அரசாங்க சார்பற்ற இயக்கங்கள், நம்பிக்கை கூட்டணி அரசாங்கத் தலைவர்கள், ஒரு சில அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்  வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்திய மக்கள், ஒரு சில மலாய் மக்கள், சீன மக்கள், அமைச்சர்கள் பலர் வேதமூர்த்திக்கு ஆதரவாக அறிக்கை விட்டு வருகின்றனர்.

அமைச்சர் வேதமூர்த்தி இந்திய மக்களுக்காக சேவையாற்றியவர். அதன் அடிப்படையில் துன் மகாதீர் அவர்களால் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அவரை பதவி விலச் சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் துன் மகாதீர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவரே வேதமூர்த்தி நன்கு வேலை செய்யக்கூடியவர் என்று  பாராட்டு வழங்கிவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி. இராமசாமி கேள்வி எழுப்பினார்.

மக்களுக்காக சேவையாற்றிய வேதமூர்த்தியை அமைச்சராக நியமனம் செய்தது பிரதமர் துன் மகாதீர். அவர்தான் அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். வேதமூர்த்தி திறமையானவர் என்று துன் மகாதீர் கூறியிருக்கிறார். பிறகு ஏன் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும். ஒரு சிலர்  தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். சீபீல்ட் ஆலய விவகாரத்தில் உண்மை நிலையை எடுத்துக்கூறி கேள்வி கேட்டது தவறா?

 ஆகையால், வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பகான் டாலான் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி குறிப்பிட்டார்.

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில்  நடந்த தாக்குதல் தொடர்பில்  காவல் துறை 2 மணி நேரம் கழித்து  வந்தது குறித்து வேதமூர்த்தி கேள்வி எழுப்பியதில் எந்தத் தவறும் இல்லை. சீபீல்ட் ஆலய விவகாரம்  தொடர்பில்  இரு இந்திய கும்பல்கள் மோதிக் கொண்டதாக தவறான அறிக்கை வெளியிட்டது, தகவல் கிடைத்தும் நேரம் கழித்து வந்தது குறித்து வேதமூர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் சீபீல்ட் ஆலயத்தில்  நவம்பர் 26இல் நிகழ்ந்த அசம்பாவிதத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்  முகமட் அடிப் 3 வாரத்திற்குப் பிறகு டிசம்பர் 18இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து  அதற்கு பொறுப்பேற்று வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி, அம்னோ தலைவர்கள், இயக்கங்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இந்திய மக்கள் வேதமூர்த்திக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்திய மக்களுக்கு பல வகையில் சேவை செய்து வந்துள்ள வேதமூர்த்தி தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் இந்திய, ஒரு சில மலாய் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலை வேதமூர்த்தி குறித்து நான் முடிவு செய்கிறேன். அதுகுறித்து யாரும் பேச வேண்டாம். அவர் திறமைசாலி. நன்றாக வேலை செய்கிறார். அவரது பணியில் நான் மனநிறைவு கொள்கிறேன். அவர் நிலை குறித்து நான் முடிவு செய்கிறேன். அதுகுறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் திட்டவட்டமாகக் கூறினார்.

Comments