'காளிமுனி தரிசனம்' திரைப்படத்திற்குத் தடை! உள்துறை அமைச்சு நடவடிக்கை

'காளிமுனி தரிசனம்' திரைப்படத்திற்குத் தடை!
உள்துறை அமைச்சு நடவடிக்கை

     வெற்றி விக்டர்

கோலாலம்பூர், டிச.28- 'காளிமுனி தரிசனம்'  மலேசிய பக்தி திரைப்படத்திற்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது.

'காளிமுனி தரிசனம்' கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தைப்பூசத்தில் இப்படம் வெளிவரும் என்று அறிவிப்பு செய்திருந்தார்கள். ஆனால், அறிவித்தபடி அப்படம் வெளியாகவில்லை.
அதற்குப் பிறகு அண்மையில் பல முன்னோட்டக் காணொளிகளை திரைப்படக் குழுவினர்  வெளியிட்டு, விரைவில் படம் வெளியாகும் என விளம்பரப்படுத்தினர்.

இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சி இன்று டிசம்பர் 28 வெள்ளிக்கிழமை இரவு 9.00மணியளவில்  தலைநகர் ஃபெடரல் திரையரங்கில் சிறப்புக் காட்சி திரையேறவிருந்தது.
ஆனால், இத்திரைப்படத்திற்கு உள்துறை அமைச்சு  தடை விதித்தது. உள்துறை அமைச்சின் அதிகாரிகள், மாலை 5.00 மணிக்கே திரையரங்கிற்கு நேரில் வந்து சிறப்புக் காட்சியை திரையேற்றக்கூடாது என்று தெரிவித்ததோடு,  அங்கு அந்தச் சிறப்புக் காட்சி நடைபெறுகிறதா என்று கண்காணித்தனர்.

இது குறித்து இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்திரன் கூறுகையில், ஹார்டிஸ்க்கில் கோளாறு என்றார் . இத்திரைப்படத்திற்கானதொழில்நுட்ப வேலைகள் மாராஸ் ரவியின் நிறுவனமான டி சினிமாவில் செய்யப்பட்டது.
மாராஸ் ரவியிடம் இது குறித்துக் கேட்டதற்கு ஹார்டிஸ்க் கோளாறு இல்லை, இத்திரைப்படம் தணிக்கைக் குழுவினரால் இன்னும் அனுமதி பெறவில்லை என்றார். அங்கு இருந்த அதிகாரிகளும்,  இத்திரைப்படம் இன்னும் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, முறையான ஒப்புதலோ அனுமதியோ பெறவில்லை என்றும் தணிக்கைக் குழுவின் ஒப்புதல் பெறாமல் திரையிடுவதோ அல்லது சிறப்புக் காட்சி நடத்துவதோ சட்டப்படி குற்றம்.  திரையுலகைச் சார்ந்தவர்கள் இதனைப் பின்பற்ற வேண்டும். முறையாகத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி, பின்னர் படத்தைத் திரையிடும்படி படக் குழுவினரை அவர்கள் வலியுறுத்தினர்.

-தென்றல்-

Comments