பிரதமர் துன் மகாதீர் முகமட்டால் நியமிக்கப்பட்ட அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டிய அவசியமில்லை! பத்தாங் பெர்ஜூந்தை இந்தியர் பண்பாட்டு கலாச்சார மையத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி அறிக்கை

பிரதமர் துன் மகாதீர் முகமட்டால்  நியமிக்கப்பட்ட அமைச்சர்  வேதமூர்த்தி பதவி விலக வேண்டிய அவசியமில்லை!
பத்தாங் பெர்ஜூந்தை இந்தியர் பண்பாட்டு கலாச்சார மையத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி அறிக்கை

குணாளன் மணியம்
         
கோலாலம்பூர், டிச. 29-   
       சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் அதிகாலையில குண்டர்கள் புகுந்து பக்தர்களை தாக்கி அராஜகம் புரிந்த நிலையில்  காவல் துறை இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தது  குறித்து கேள்வி எழுப்பிய பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று பத்தாங் பெர்ஜூந்தை இந்தியர் பண்பாட்டு கலாச்சார மையத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி கூறியுள்ளார்.
  
சீபீல்ட் ஆலய விவகாரத்தில் காவல் துறை தாமதமாக செயல்பட்டுள்ளது என்பதை இந்த நாடே அறியும் பட்சத்தில் அதுகுறித்து கேள்வி எழுப்பிய அமைச்சர் வேதமூர்த்தியை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் உள்ளிட்ட பலரும் பதவி விலகச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்று ஐயப்பன் முனியாண்டி கேள்வி எழுப்பினார்.

ஆலயத் தாக்குதல் மறக்கப்பட்டு அதன் பிறகு நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு வேதமூர்த்தியை காரணம் காட்டி பதவி விலகச் சொல்வது அர்த்தமில்லாத ஒன்று. ஹிண்ட்ராப் போராட்டத்தின் வழி இந்திய சமுதாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருந்தவர்  அமைச்சர் பி.வேதமூர்த்தி. அவர்  ஏன் பதவி விலக வேண்டும்?
அவர் என்ன தவறு செய்தார்? ஆலயத் தாக்குதல் அவரால் நிகழ்ந்ததா? இந்த சம்பவத்தில் நிகழ்ந்துள்ள மரணம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்வது தேவையில்லாத ஒன்று என்றார் ஐயப்பன் முனியாண்டி.

இந்தச் சம்பவத்தில் முகமட் அடிப் மரணத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று பரவலாக குரல் எழுப்பப்பட்டு கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சியில் இருப்பவர்களே வேதமூர்த்தியை பதவி விலகச் சொன்னால் பிறகு அவரை அமைச்சராக நியமித்த பிரதமருக்கு என்ன மரியாதை இருக்கிறது? வேதமூர்த்தியை பதவி விலகச் சொல்ல சாடிக் யார்? அவர் என்ன போராட்டவாதியா? என்ன அரசியல் அவருக்குத் தெரியும். துன் மகாதீரால் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள  சாடிக் மக்களுக்கு என்ன செய்தார்? எதை சாதித்தார் என்று ஐயப்பன் முனியாண்டி கேட்டார்.

அமைச்சர் வேதமூர்த்தி இந்திய மக்களுக்காக சேவையாற்றியவர். அதன் அடிப்படையில் துன் மகாதீர் அவர்களால் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரை பதவி விலச் சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் துன் மகாதீர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவரே வேதமூர்த்தி நன்கு வேலை செய்யக்கூடியவர் என்று  பாராட்டு வழங்கிவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு என்ன வந்தது?

மக்களுக்காக சேவையாற்றிய வேதமூர்த்தியை அமைச்சராக நியமனம் செய்தது பிரதமர் துன் மகாதீர். அவர்தான் அதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். வேதமூர்த்தி திறமையானவர் என்று துன் மகாதீர் கூறியிருக்கிறார். பிறகு ஏன் வேதமூர்த்தி பதவி விலக வேண்டும். ஒரு சிலர்  தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். சீபீல்ட் ஆலய விவகாரத்தில் உண்மை நிலையை எடுத்துக்கூறி கேள்வி கேட்டது தவாறா? ஆகையால், வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர். 

சீபீல்ட் ஆலயத்தில்  நவம்பர் 26இல் நிகழ்ந்த அசம்பாவிதத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்  முகமட் அடிப் 3 வாரத்திற்குப் பிறகு டிசம்பர் 18இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து  அதற்கு பொறுப்பேற்று வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி, அம்னோ தலைவர்கள், இயக்கங்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருவது குறித்து கருத்துரைக்கையில் ஐயப்பன் முனியாண்டி அவ்வாறு குறிப்பிட்டார்.

Comments