சீபீல்ட் ஆலயத்தை அகற்ற சிபாரிசு கடிதம் வழங்கியிருந்த மோகன் ஷாண் தலைமைத்துவம் இனியும் நீடிக்கக் கூடாது! தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராமநாதன் கோவிந்தன் சூளுரை

சீபீல்ட் ஆலயத்தை அகற்ற  சிபாரிசு கடிதம்  வழங்கியிருந்த மோகன் ஷாண் தலைமைத்துவம் இனியும் நீடிக்கக் கூடாது!
தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராமநாதன் கோவிந்தன் சூளுரை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.14-
          சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை வேறு இடத்திற்கு அகற்றலாம் என்று சிபாரிசு கடிதம் வழங்கியதோடு ஆலய சிலைகளை அகற்ற மேம்பாட்டு நிறுவனத்துக்கு துணையாக வந்த  மலேசிய இந்து சங்கத்தின் நடப்புத் தலைவர் டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவம் இனியும் நீடிக்கக் கூடாது என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராமநாதன் கோவிந்தன் ஆவேசமாக கூறினார்.
       மலேசிய இந்து சங்கத்தில் தலைமைத்துவ மாற்றம் இருந்தால் மட்டுமே சங்கம் சரியான பாதையில் வழிநடத்த முடியும். அதேநேரத்தில் ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவம் நீடித்தால் பல்வேறு பிரச்சினைகள் எழ வாய்ப்பு இருப்பதாக  சங்க உறுப்பினரான தர்மயுத்தம் அணியில் மோகன் ஷாணை எதிர்த்துப் போட்டியிடும் ராமநாதன் கோவிந்தம் தேசம் வலைத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவ்வாறு தெரிவித்தார்
         டத்தோ மோகன் ஷாண் மலேசிய இந்து சங்கத்தை தன் விருப்பத்திற்கு நடத்திக் கொண்டிருக்கிறார். சொந்த பதிப்பகம் வைத்துக் கொண்டு சங்கத்தின் அச்சு வேலைகளை அங்கேயே செய்கிறார். எம்.எச். 17 விமான விபத்தின் போது அதில் உயிரிழந்த இந்து பயணிகளுக்கு ஈமக்காரிய சடங்கை நடத்த ஐயரை அனுப்பாமல் இவரே ஹாலந்து நாட்டிற்கு சென்று ஈமக்காரியங்கள் செய்துள்ளார். மலேசிய இந்து சங்கத்தின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் டத்தோ மோகன் ஷாண் தன் கடமையை நிறைவேற்றத் தவறி விட்டார்.
           மலேசிய இந்து சங்கத்தின் கூட்டரசு பிரதேச பேரவை கலைநிகழ்ச்சிகள், விருந்து நிகழ்ச்சிகள் நடத்தி வசூல் செய்து வைத்திருந்த 90 ஆயிரம் வெள்ளி கட்டட நிதியை அதன் புதிய தலைவரிடம் பேசி எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நிதியின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியவில்லை. மேலும் நாட்டில் ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடப்பாடு கொண்டுள்ள இந்து சங்கம் இதனை செயல்படுத்தத் தவறி விட்டது. இப்படி பல்வேறு குளறுபனிகளுக்கு காரணமாக இருக்கும் டத்தோ மோகன் ஷாண் இனியும் தலைவராக இருக்கக் கூடாது என்று ராமாநாதன் சொன்னார்.
             இந்த 90 ஆயிரம் கட்டட நிதியில் கைவைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் நாங்கள் தர்மயுத்தம் அணியில் இணைந்து டத்தோ மோகன் ஷாண் அணிக்கு எதிராகப் போட்டியிடுகிறோம். மேலும் சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தை காக்க போராட்டம் நடத்தி வரும் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆலயத்தை அகற்ற சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளார் டத்தோ மோகன் ஷாண். இந்த செயல் ஒட்டுமொத்த இந்துக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவரை பதவி விலகச் சொல்ல பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
        சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்தில் டத்தோ மோகன் ஷாண் முறையான நடவடிக்கை யை கையாளவில்லை.  இதனால் சீபீல்ட் ஆலயப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. டத்தோ மோகன் ஷாண் நினைத்திருந்தால் சீபீல்ட் ஆலயப் பிரச்சினைக்கு பேச்சு நடத்தி தீர்வு கண்டிருக்கலாம். இப்படி மலேசிய இந்து சங்கம் தன் கடமைகளை நிறைவேற்றாமல் அதன்  இலக்கை திசை மாற்றிக் கொண்டுச் சென்ற டத்தோ மோகன் ஷாண் தலைமைத்துவம் நிராகரிக்கப்பட வேண்டும் என்றார் ராமநாதன் கோவிந்தன்.
          மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. இது தேர்தல் ஆண்டாகும். மலேசிய இந்து சங்கத்தில் 12 ஆயிரம் தகுதி் பெற்ற வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்களை வாக்களிப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆட்சிக்குழுவுக்கு தேர்வு பெற்றவர்களில் ஒருவர் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்படுவார். தலைவரை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து  தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தலைவர் பதவி வேட்பாளர் ராமநாதன் கோவிந்தனை சார்ந்த்தாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments