இளைஞர்கள் மக்கள் சேவையின்வழி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் புத்தாண்டு வாழ்த்து

இளைஞர்கள் மக்கள் சேவையின்வழி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!
செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், டிச.31-
         இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை மறந்து மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கி தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐபிஎப் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்
வலியுறுத்தியுள்ளார்.
       
இளைஞர் சக்தி மகத்தான சக்தி. இத்தகைய மகத்தான இளைஞர் சக்தி  சேவைக்கு குறிப்பாக மக்கள் சேவைக்கு முக்கியத்துவம் வழங்கினால் மக்கள் முன்னேற்றமடையும் அதேநேரத்தில் இளைஞர்களும் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

நாட்டில் இந்திய இளைஞர்கள் பலர்  தங்களுக்கு வாய்ப்பு இல்லையே என்ற குறைபாட்டுடன் இருக்கின்றனர். அதனை மக்கள் சேவையின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம். இளைஞர்கள் மக்கள் சேவையை ஏற்படுத்திக் கொள்வதன் வழி  இளைஞர்களுக்கான வாய்ப்புகள் தானாக தேடி வரும் என்றார் செனட்டர் டத்தோ சம்பந்தன்.

மேலும் இளைஞர்களே  இளைஞர்களுக்கு சேவை செய்யலாம். இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு, வர்த்தக வாய்ப்பு, கல்வி வாய்ப்பு என்று பலவற்றை இளைஞர்களே ஏற்படுத்தித் தரலாம்.  இந்த வாய்ப்புகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தித் தரும் பட்சத்தில் தங்களுக்கு வாய்ப்பு இல்லையே எனும் குறைபாடு இளைஞர்கள் மத்தியில் ஏற்படாது என்று டத்தோ சம்பந்தன் சொன்னார்.

நாட்டில் இளைஞர்களுக்காக பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் அந்த வாய்ப்புகளை மக்கள் சேவையின் மூலம் தங்களை அடையாளப்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். இளைஞர் படை சக்திமிக்க படையாகும்.  இந்த இளைஞர் சத்தியை நமது இந்திய இளைஞர்களின் உருமாற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட டத்தோ எம். சம்பந்தன் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments