கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி விவகாரம்! மஇகா மேல்முறையீடு செய்யாது! தேர்தலை சந்திக்க ம.இ.கா தயார்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அதிரடி அறிவிப்பு

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி விவகாரம்!
மஇகா மேல்முறையீடு செய்யாது!
தேர்தலை சந்திக்க  ம.இ.கா தயார்!
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அதிரடி அறிவிப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச. 11-
           கேமரன் மலை நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் ம .இ.கா மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அதிரடி அறிவிப்பு செய்துள்ளார்.
          நாங்கள் மேல்முறையீடு செய்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகையால், மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம். மக்கள் முடிவு செய்யட்டும். ஜசெக வேட்பாளர் யாராக இருந்தாலும் தேர்தலில் சந்திக்க  ம.இ.கா தயாராகி விட்டதாக மத்திய செயலவை கூட்டத்திற்கு தலையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.
          கேமரன் மலை தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை காட்டிலும் மறுதேர்தலில் போட்டியிட்டு பலத்தை நிரூபித்து காட்டுவதுதான் சிறந்தது என்றார் விக்னேஷ்வரன்.
         கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ சிவராஜ் கையூட்டு வழங்கியதாக ஆதாரம் எதுவும் இல்லை. சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் தீப்பளித்து விட்டது. இந்நிலையில் மேல்முறையீடு செய்வதைக் காட்டிலும் தேர்தலில் போட்டியிடுவதுதான் நல்லது என்று மத்திய செயலவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக விக்னேஷ்வரன் சொன்னார்.
           கேமரன் மலை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று கேட்டதற்கு டத்தோ சிவராஜ் அல்லது வேறு புதிய வேட்பாளர் போட்டியிடலாம். ம.இ.கா  மக்கள் களத்தில் தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டது. ஜசெகவிற்கு பல்வேறு விவகாரம் தொடர்பில் தற்போது மலாய்க்காரர்கள் எதிர்ப்பு உள்ளதால் ம.இ.கா வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
        இந்த விவகாரம் தொடர்பில் தேசிய முன்னனியிடம் கலந்து பேசவில்லை. கேமரன் மலை ம.இ.கா தொகுதி என்பதை டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி தெளிவாகத் தெரிவித்து விட்டார். ஆகையால், ம.இ.கா கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும். இதற்காக ம.இ.கா அத்தொகுதியில் வேலை செய்யும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் திட்டவட்டமாகக் கூறினார்.

Comments