விபூதி, சந்தனம், சாமி பொருட்களின் பாக்கெட்டுங்களில் முருகப் பெருமான் படங்கள்! 2019 தைப்பூசத்தில் விடிவுக்காலம் பிறக்குமா? -பினாங்கு இந்து இயக்கம் கேள்வி

விபூதி, சந்தனம், சாமி பொருட்களின் பாக்கெட்டுங்களில் முருகப் பெருமான் படங்கள்!
 2019 தைப்பூசத்தில் விடிவுக்காலம் பிறக்குமா?
-பினாங்கு இந்து இயக்கம் கேள்வி

பினாங்கு,ஜன.10-
       தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் படங்கள் விபூதி, சந்தன பாக்கெட்டுகளில் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை என்றால் அது இந்து சமயத்திற்கு சவாலாக அமையலாம் என்று பினாங்கு இந்து இயக்கத்தின் தலைவர் பி.முருகையா கூறினார்.

இந்த சவால் என்பது இறைவன் மீது பக்தி கொண்ட இந்துக்கள்  அப்பாக்கெட்டுகளை பயன்படுத்திய பின்னர் அதனை  குப்பைத் தொட்டிகளில் வீசுவது ஏன் என்ற கேள்வியை உருவாக்கும் என்று பி.முருகையா சொன்னார்.

இந்த 2019 தைப்பூசத்தின் போது அதிகமான விபூதி, சந்தனம், குங்குமம் அடங்கிய பாக்கெட்டுகளில் சாமி திருஉருவப் படங்கள் பதிக்கப்படுகின்றன. அவை பயன்படுத்திய பிறகு வீசி விடுகிறார்கள். அதில் இருக்கும் முருகப் பெருமானின் படங்களும் குப்பையில் கிடப்பது பெரும் வேதனைக்குரியது என்றார் அவர்.

பினாங்கு இந்து இயக்கம் அண்மையில் பல கடைகளுக்கு சென்று நடத்திய சோதனை நடத்திய  போது சாமி பொருட்களில் சாமி படங்கள் பதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் தைப்பூசத்தின் போது, இது தொடர்பாக பல முறை குரல் எழுப்பிய போது விபூதி, சந்தனம், ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம் போன்ற பாக்கெட்டுகளில்  சாமி படங்களை பதிக்கிறார்கள். இப்பொருட்களின் தயாரிப்பாளர்கள் சாமி படங்களை அச்சிடுவதை நிறுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தை  பொருட்படுத்தாமல் இருப்பது சரியல்ல. இறைவனின் படங்கள் இல்லாமல் கூட அந்த பாக்கெட்டுகளை தயாரிக்கலாம். மக்களை கவர்வதாக நினைத்து சாமி படங்கள் அச்சடிப்பவது ஏற்புடையதல்ல.

அந்த விபூதிகளை பயன்படுத்திய பிறகு பாக்கெட்டுகள் வீசப்படுகின்றன. யாரும் பாக்கேட்டுகளை சேர்த்து வைப்பதில்லை. பல சமயங்களில் அது பொதுவில் மிதிப்படும் போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது என்று பி.முருகையா தெரிவித்தார்.

வியாபார நோக்கத்திற்காக தயாரிப்பாளர்கள் செயல்படுவது அவர்வர் உரிமையன்றாலும், சாமி படங்கள் போடக்கூடாது என்பது மக்களின் உரிமை. சமயத்தை பாதிக்கும் செயல்களை இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் இதனை உணர வேண்டும். வாடிக்கையாளர்கள் அவ்வாறு சாமி படங்கள் கொண்ட விபூதிகளை வாங்காமல் தங்களுடைய எதிர்ப்பை காட்ட வேண்டும். இதன்வழி எதிர்காலத்தில் தயாரிப்பாளர்களும் சாமி படங்களை போட மாட்டார்கள்.

மேலும், தைப்பூசத்தின் போது, சில தனியார் நிறுவனங்கள் மோர், தயிர் பானங்களை வழங்குவார்கள். ஆனால், அவர்களின் பால் மாவில் ஒமேகா 3 எனப்படும் மீன் எண்ணெய் இருக்கும். சைவம் அடிப்படையில் வழங்கப்படும் மோரில்   மீன் எண்ணெய் கலந்த பால்மாவு பயன்படுத்துகிறார்கள். மீன் எண்ணை கலந்த  மோர், தயிர் பானங்களை பருக வேண்டிய அவலம் நடக்கிறது. ஆகையால், மோர், தயிர் பானங்கள் வழங்கும் தண்ணீர் பந்தல் போடுபவர்கள் தாங்கள் வாங்கும் பால்மாவில் இருக்கும் லேபலை படிக்க வேண்டும். சில நேரத்தில் மக்களை திசை திருப்ப வைட்டமின்  டி என்று எழுதப்பட்டுள்ளது. மீன் எண்ணெயில் தான் வைட்டமின் டி இருக்கும் என்பது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய பக்தர்கள் கொண்டுச் செல்லும், பாலிலும் மீன் எண்ணெய் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சிக்கலை தவிர்க்க, ஆலய நிர்வாகத்தினர் பசும்பால் விற்றாலும் சிறப்பு தான். பக்தர்கள் அங்கேயே வாங்கிச் சென்று அபிஷேகம் செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

 இந்த ஆண்டு தைப்பூசத்திலாவது இத்தகைய பிரச்சினைகளுக்கு விடிவுக்காலம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Comments