நடுத்தர மக்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் சுமையை ஏற்படுத்துகிறது! நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பெட்ரோல் விலையை சீர்படுத்த வேண்டும்! பிரசாத் சந்திரசேகரன் வேண்டுகோள்

நடுத்தர மக்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் சுமையை ஏற்படுத்துகிறது!
நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பெட்ரோல் விலையை சீர்படுத்த வேண்டும்!
பிரசாத் சந்திரசேகரன் வேண்டுகோள்

கோலாலம்பூர், ஜன.1-
         நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் பெட்ரோல் விலையை சீர்படுத்த வேண்டும் என்று ம.இ.கா செலாயாங் தொகுதி இளைஞர் பிரிவு துணைத் தலைவர் பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய முன்னனி அரசாங்கம் அமல்படுத்திய வார பெட்ரோல் விலைக்கு எதிர்க்கட்சியாக இருந்த நம்பிக்கை கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் கடந்த மே 9இல் ஆட்சியைப் பிடித்த நிலையில் வார பெட்ரோல் விலையை அகற்றி ரோன் 95  விலை வெ.2.20 என்றும்  டீசல் விலை வெ.2.28 என்றும்   நிர்ணயித்தது. பிரதமரும் இதற்கு அங்கீகாரம் தெரிவித்தார்.

இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம்  மீண்டும் வார பெட்ரோல் விலையை அமல்படுத்தியுள்ளதால் நடுத்தர மக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரசாத் சந்திரசேகரன் தெரிவித்தார்.

வார பெட்ரோல் விலை நிர்ணயம் இனிமேல் இல்லை என்று வாக்குறுதியளித்த நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அது வாக்குத் தவறி விட்டது.

இந்த வார பெட்ரோல் விலை நிர்ணயம் நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல் விலை சீராக இல்லாத காரணத்தினால் வர்த்தகத்தில் லாப- நஷ்ட கணக்கு பார்க்க முடியவில்லை. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார் பிரசாத்.

நடுத்தர மக்கள் தங்கள் மாத குடும்ப வரவு செலவு கணக்கில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் சுயநலப் போக்கில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் வார பெட்ரோல் விலையைக் கொண்டு வந்துள்ளது பி40 மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார பெட்ரோல் விலை நிர்ணயம் பெட்ரோல் விலையைக் குறைக்கும் என்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது முந்தைய அறிவிப்புக்கு முரணாக உள்ளது. ஆகையால், நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் பெட்ரோல் விலையை ஒரே விலையாக சீர்படுத்த வேண்டும் என்று பிரசாத் சந்திரசேகரன் கேட்டுக் கொண்டார்.

Comments