தமிழ் நேசன் நாளிதழ் மின்னியல் ஊடகமாக வெளிவருமா? இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் டத்தோஸ்ரீ வேள்பாரி

தமிழ் நேசன் நாளிதழ் மின்னியல் ஊடகமாக வெளிவருமா?
இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் டத்தோஸ்ரீ வேள்பாரி

குணாளன் மணியம்

 கோலாலம்பூர், ஜன 29-
நாட்டின் பழைமை வாய்ந்த நாளிதழான தமிழ்நேசன் மின்னியல் ஊடகமாக வெளியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ வேள்பாரி கூறியுள்ளார்.

நாங்கள் தற்போது பணியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் இழப்பீடு குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் நேசன் எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தமிழ்நேசன் மின்னியல் ஊடகமாக வெளிவருமா என்று தேசம் வலைத்தளம் தொடர்பு கொண்டு கேட்ட போது டத்தோஸ்ரீ வேள்பாரி அவ்வாறு சொன்னார்.

கடந்த 10 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வந்த தமிழ் நேசன் பிப்ரவரி 1 முதல் மூடப்படுவது உறுதி. இதற்கு முழுக்க முழுக்க பண நெருக்கடிதான் காரணம் என்று தெரிவித்த டத்தோஸ்ரீ வேள்பாரியிடம் தமிழ்நேசன் மின்னியல் ஊடகமாக வெளிவர சாத்தியம் இருக்கிறதா என்று கேட்டதற்கு அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் வேள்பாரி.

தென் ஆசியாவில் மிகவும் பழமை வாய்ந்த நாளிதழான தமிழ்நேசன் பிப்ரவரி 1ஆம் தேதியோடு நிறுத்தப்படுகின்றது.
இதுகுறித்து தமிழ்நேசன் பணியாளர்களுக்கு வேலை நிறுத்தத்திற்கான உறுதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கான ஊதியம் மூன்றாம் மாதம் வரை வழங்கப்படும் என்றும் அந்த உறுதி கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நேசன் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்துள்ளதன் காரணமாக தமிழ் நேசனின் நிர்வாகம் ஊடகத் துறையில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளது.

கடந்த 10.9.1924ஆம் ஆண்டில்  தமிழ்நேசன் பத்திரிகையின் முதல் பிரதி வெளிவந்தது. இப்பத்திரிகையை இந்தியா, திருச்சியில் கடந்த 1890 ஆண்டில் பிறந்த நரசிம்ம ஐயங்கார் 1921இல் அப்போதய மலாயா வந்து முதல் பிரதியை 10.9.1924இல் தொடங்கினார். 

மலேசியாவின் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை பதிவு செய்த ஒரே நாளில் என்ற பெருமையை கொண்டிருந்த தமிழ்நேசன் இனி வெளிவராது என்ற செய்தி வாசகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments