வேதமூர்த்தி விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி இந்திய அமைச்சர்கள் இன்றுவரை மௌனம் சாதிப்பது ஏன்? செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் கேள்வி

வேதமூர்த்தி விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி இந்திய அமைச்சர்கள் இன்றுவரை மௌனம் சாதிப்பது ஏன்?
செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் கேள்வி 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.5-
       இந்தியர்கள் பிரச்சினைகளில் மெளனம் சாதித்த இந்திய அமைச்சர்கள் வேதமூர்த்தி விவகாரத்தில் ஏன் மௌன சாமியாராகி விட்டனர் என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகளுக்கு வாய்மூடி இருந்த நம்பிக்கை கூட்டணி இந்திய அமைச்சர்கள்,  பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி விவகாரத்தில் மௌனம் சாதித்து வருவது ஏன்? தங்கள் பதவி பறிபோய்விடும் என்று பயமா? எனக்கென்ன வந்தது என்ற எண்ணமா என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் அவ்வாறு தெரிவித்தார்.

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு மறுநாள் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் மனிதவள அமைச்சர் குலசேகரன்,  தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, நீர்வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் உள்ளிட்ட சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து பத்திரிகை அறிக்கை வெளியிட்ட வேதமூர்த்தி இன்று பலிகடா ஆகிவிட்டார். வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என்று ஒரு சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கினர. ஆனால், அங்கிருந்தவர்கள் யாரும் இதுவரை வாய்திறக்கவில்லை. வேதமூர்த்தி மீது அப்படி என்ன காழ்ப்புணரச்சி என்று வினவினார் சம்பந்தன்.

சீபீல்ட் ஆலய விவகாரம் தொடர்பான அந்த கூட்டறிக்கை குறித்து அமைச்சர்கள் நால்வரும் விவாதித்த பின்னரே அது வெளியிடப்பட்டது. ஒற்றுமை துறை அமைச்சர் என்ற நிலையில் வேதமூர்த்தி அந்த ஊடக அறிக்கையை வாசித்தார். இந்நிலையில் அது முழுக்க முழுக்க வேதமூர்த்தி அறிக்கை போன்று மற்ற அமைச்சர்கள் நடவடிக்கை அமைந்துள்ளது. இன்றுவரை அவருக்கு ஆதரவாக யாரும் அறிக்கை வெளியிடவில்லை. பேசவும் இல்லை என்றார் சம்பந்தன்.

நான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் வேதமூர்த்திக்கு ஆதரவாக அண்மையில் ஊடகத்தில் அறிக்கை வெளியிட்டேன். எங்கே போனர்கள் குலசேகரன், கோபிந்த் சிங், சேவியர்? இவர்களுக்கு இந்தியர் என்ற உணர்வு ஏன் இல்லை? கடந்த காலத்தில் நம்பிக்கை கூட்டணி எதிர்க்கட்சியாக இருந்த போது பல அறிக்கைகள் வெளியிட்டார்கள். ஆனால், இன்று ஜாகீர் நாயக், இந்திரா காந்தி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இவர்கள் வாய்மூடி மௌன சாமியாராகி விட்டனர்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று சொன்னவர்கள் இன்று இந்தியர் பிரச்சினைகளுக்கு வாய் திறக்க மறுக்கிறார்கள். வேதமூர்த்தி விவகாரத்தில் தற்காத்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்திறக்க மறுத்து விட்டார்கள். இந்திய அமைச்சர்கள் நடவடிக்கை நம்பிக்கை கூட்டணி இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Comments