மாணவர்கள் கணினி, இணைய சேவைகளை தேவையறிந்து பயன்படுத்த வேண்டும்! பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வலியுறுத்து

மாணவர்கள் கணினி, இணைய சேவைகளை தேவையறிந்து பயன்படுத்த வேண்டும்!
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வலியுறுத்து

குணாளன் மணியம்

பத்துகேவ்ஸ், ஜன.7-
          இந்திய மாணவர்கள் கணினி, இணைய சேவைகளை தேவையறிந்து பயன்படுத்த வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கணினி, இணைய சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அதனையே சரியாக, முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று பத்துமலையில் தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் கணினி அறிவியல் அடிப்படை கல்வியை முடித்த மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரபாகரன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த நவீன காலகட்டத்தில் கணினி,  இணைய சேவைகள் இன்றியமையாத ஒன்று. கணினி, இணைய சேவைகள் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. ஒரு கைபேசியை வைத்துக் கொண்டு உலகத்தை சுற்றி வரலாம். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இது மாணவர்களின் கல்விக்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
 இன்று எல்லா பள்ளிகளில் கணினி, இணைய சேவைகள் அத்தியாவசிய தேவையாகி விட்டது.
இந்நிலையில் மாணவர்கள் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். கைப்பேசியில் அடங்கியிருக்கும் இணைய, கணினி சேவையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்யத் தவறினால் எல்லாம் மோசமாகிவிடும் என்றார் பிரபாகரன்.

இந்த நிகழ்வில் கணினி அறிவியல் துறையில் 3 மாதகால அடிப்படை பயிற்சியை முடித்த 59 மாணவர்களுக்கு பிரபாகரன் நற்சான்றிதழ்   வழங்கினார்.

இந்நிகழ்வில் தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சுவாயம் ஜெயாநந்த சரஸ்வதி மகாராஜ், மைநாடி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெய்யேந்திரன், டத்தோ சிவபரஞ்சோதி, மாணவர்கள், பெற்றோர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments