தைப்பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக அடித்தளம் அமைக்கும்! செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் வாழ்த்து

தைப்பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாக அடித்தளம் அமைக்கும்!
செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன.14-
     தைப்பொங்கல் திருநாள்  மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும்  என்று  ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் துயரங்களை போகியெனும் தீயிட்டு, பழையன  போகட்டும். புதியன புதிய விடியலாக வரட்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் மக்கள் வாழ்க்கை சர்க்கரைப் பொங்கலாய் இனிக்க வேண்டும் என்று டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.

தைத்திங்கள் முதல் நாள் தமிழர் புத்தாண்டு.  இரட்டைத் திருநாளான இன்று இல்லங்களில் தோரணமிட்டு தைத்திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடுவோம். உழவுக்கு வந்தனைச் செய்து, விவசாயக்கரங்களையும் கால்நடைகளையும் போற்றி ஒற்றுமைத் தமிழராய் ஓரணியில் நின்று பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் என்றார் சம்பந்தன்.

உணர்வுகளால் ஒன்றுபடுவோரை வரவேற்று தமிழர் தம் பண்பை வெளிப்படுத்துவோம். ஒற்றுமை உணர்வுடன் உழைத்து வெற்றியினை  ஈட்ட  உறுதி ஏற்போம். உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி வெள்ளத்தை வெளிப்படுத்துவோம்.

வள்ளுவர் குறளுக்கு ஏற்ப உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழில் முதன்மை தொழிலாகவும் சிறப்பு வாய்ந்த தொழிலாகவும் போற்றப்படுகிறது. ஆகையால் நாம் விவசாயத் துறையில் பீடுநடை போட வேண்டும். அதேநேரத்தில் தமிழர்கள் கல்வி, பொருளாதாரம், சமயம் ஆகியவற்றில் முன்னேற உறுதி கொள்ளும் அதேவேளையில் சமயம், கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும்  கட்டிக்காக்க சபதம் எடுத்துக் கொள்வோம். 

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கெற்ப இந்த தமிழ்ப்புத்தாண்டில் மக்கள் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர அனைவரும் பாடுபடுவோம். இந்த தைப்பொங்கல் நாளில் நமக்கு ஏற்படும் மாற்றமும் மகிழ்ச்சியும் எப்போதும்  இருக்க வேண்டும். இந்த தைப்பொங்கல் நாளில் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ இறைவனை பிரார்த்தனை செய்யும் அதேவேளையில் மலேசிய தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Comments