பத்துமலை தைப்பூசத் திருவிழா சமய நெறிமுறைகளுடன் நடைபெறுவதை நடவடிக்கை குழு உறுதி செய்யும்! மாண்புமிகு குணராஜ் தகவல்

பத்துமலை தைப்பூசத் திருவிழா சமய நெறிமுறைகளுடன் நடைபெறுவதை நடவடிக்கை குழு உறுதி செய்யும்!
மாண்புமிகு குணராஜ் தகவல்

குணாளன் மணியம், படங்கள்: முகேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன.18-
          பத்துமலை தைப்பூசத் திருவிழா சமய நெறிமுறைகளுடன் நடைபெறுவதை தைப்பூச நடவடிக்கை குழு உறுதி செய்யும் என்று அதன் தலைவர்
மாண்புமிகு குணராஜ் கூறியுள்ளார்.

பத்துமலை தைப்பூச நடவடிக்கை குழு 6ஆவது ஆண்டாக தங்களின் நடவடிக்கை குழு சேவையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா பக்தி நெறிமுறைகளுடன் நடைபெறுவதை உறுதி செய்ய மீண்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான ஜி.குணராஜ் தெரிவித்தார்.

இந்த தைப்பூச நடவடிக்கை குழு பத்துமலை அடிவாரத்தில் ஆலய வெளிப்பகுதியில் நடக்கும் நெறிமுறையற்ற நடவடிக்கைகளை காவல் துறை மற்றும்  செலாயாங் நகராண்மைக்கழக அமலாக்க பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடந்த 6 ஆண்டுகளில் தாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குணராஜ் சொன்னார்.

பத்துமலை அடிவாரத்தில் காவடி எடுப்பவர்கள் சமய நெறிமுறைகளுடன் காவடி எடுக்க வேண்டும். பக்தி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கோரமான காவடிகள் வேண்டாம். அதேநேரத்தில் முகமூடி, ஊதி உள்ளிட்ட சமயத்திற்கு தொடர்பில்லாத பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அது பறிமுதல் செய்யப்படும். மேலும் மதுபான விற்பனை 3 நாட்களுக்கு மூடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குணராஜ் கூறினார்.


கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும் வெள்ளிரத ஊர்வலத்தில் பால்குடன், காவடி எடுக்கும் பக்தர்கள் வெள்ளிரதத்தின் முன்னும் பின்னும் நடந்து வருவது சிறப்பு.


ADVERTISEMENT

 ADVERTISEMENT


ஒரு சிலர் வெள்ளிரதத்தின் முன்னே விரைவாக நடந்து வருகிறார்கள். இச்சமயத்தில் கூட்டமாக வருவது நல்லது. இல்லாவிடில் பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்படும் என்று குணராஜ் தெரிவித்தார்.


பத்துமலையில் இவ்வாண்டு தைப்பூசம் நெறிமுறைகளுடன் நடைபெறுவதை தைப்பூச நடவடிக்கை குழு உறுதி செய்யும் என்றும் இதற்கு மக்கள் ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் குணராஜ் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் மலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், காவல் துறை உள்ளிட்ட சில இயக்கங்களின் பொறுப்பாளர்கள், முன்னாள் செலாயாங் நகராண்மைக்கழக உறுப்பினர்  நந்த கோபாலன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments