ஜொகூர் பாரு, மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வெ.15 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் சாதனங்கள் வழங்கிய மலேசிய தேசிய பல்கலைக்கழக எம்பிஏ மாணவர்கள்! "எனது தமிழ்ப்பள்ளி" திட்டம் தொடர வேண்டும்! பல்கலைக்கழக மாணவர்கள் விருப்பம்

ஜொகூர் பாரு, மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வெ.15 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் சாதனங்கள் வழங்கிய  மலேசிய தேசிய பல்கலைக்கழக எம்பிஏ மாணவர்கள்!
"எனது தமிழ்ப்பள்ளி" திட்டம் தொடர வேண்டும்!
பல்கலைக்கழக மாணவர்கள் விருப்பம்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.7- 
      நாட்டில் ஒவ்வொருவருக்கும்  தமிழ்ப்பள்ளியை பாதுகாக்கும் கடப்பாடு உள்ளது. "எனது தமிழ்ப்பள்ளி" என்று பலரும் குறிப்பாக முன்னாள் மாணவர்கள்  நினைத்தாலே தமிழ்ப்பள்ளிகளின் நிலை மாறலாம்.

அந்த வகையில் ஜொகூர் பாரு, மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியை தத்தெடுத்த மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் எம்பிஏ பயிலும் மாணவர்கள் அப்பள்ளிக்கு 15 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள அறிவியல் பொருட்கள், அடிப்படை பொருட்களை வழங்கினர்.

இந்த திட்டத்தை இவர்கள் மேற்கொண்டதற்கு என்ன காரணம் என்று அலசிய போது பல விவரங்களை தெரிந்து கொண்டோம். நாட்டில் பல தமிழ்ப்பள்ளிகள் உதவியை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை. தமிழ்ப்பள்ளிகளுக்கு நாம்தான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜொகூர் பாரு, மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியை தேர்வு செய்து உதவி வழங்கியிருக்கிறார்கள் இந்த எம்பிஏ மாணவர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தமிழ்ப்பள்ளிக்கு  உதவும் திட்டத்தை தொடங்கிய இம்மாணவர்கள் அடிக்கடி இப்பள்ளிக்கு வருகை மேற்கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இத்திட்டம் கடந்த ஜனவரி 27ஆம் நாள் செயல்வடிவம் கண்டது. இந்த மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் நிகழ்வில் இப்பள்ளிக்கு 15 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள அறிவியல் பயன்பாட்டு பொருட்களை எம்பிஏ மாணவர்கள் நன்கொடையாக வழங்கினர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய "எனது பள்ளி" திட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான டாகடர் பாஸ்லி, இத்திட்டத்தை செயல்படுத்திய மாணவர்களுக்கும் இதனை வெற்றி பெறச் செய்த மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேவையறிந்து இவர்கள் சரியான தருணத்தில் உதவி வழங்கியுள்ளனர். இத்திட்டத்தை மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயிலும் பட்டதாரி மாணவர்கள் மேற்கொண்டனர். இத்திட்டமானது தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன்வழி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வித் தரத்தை மேம்படுத்திக் கொள்வதோடு அறிவியல் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றார் டாக்டர் பாஸ்லி.

இந்த நலத்திட்டத்தை மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்கள் மேற்கொண்டனர். நமது சொந்த சமூகத்திற்கு பயன்படும் இத்தகைய திட்டங்கள் தொடரப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நலனுக்காக எம்பிஏ மாணவர்கள் மேற்கொண்டுள்ள இத்திட்டத்தை மற்ற மாணவர்களும் மேற்கொள்ள வேண்டும். இதன் வழி எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு குறிப்பாக தோட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு வழிகாட்டல் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த டாக்டர் பாஸ்லி, இத்திட்டம் வெற்றி பெற உதவிய மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி பிரேமா ராமகிருஷ்ணன், சிகாமாட் கல்வி இலாகா அதிகாரி திருமதி ஜெயவேணி, மற்றொரு அதிகாரி ஜாய்ஸ் சாடோன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் டாக்டர் பாஸ்லி நன்றி் தெரிவித்துக் கொண்டார்.

இந்த "எனது தமிழ்ப்பள்ளி" திட்டம் வெற்றி பெற்றதற்கு பல நல்ல உள்ளங்களின் ஆதரவும் முக்கியமாக இருந்தது. இதில் சைம் டார்பி பிளாண்டேஷன், மைடின், இளங்கோ ராஜமாணிக்கம், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாராகுமார், அவரது பிரதிநிதி விஜய் ஆகியோர் உதவி வழங்கியுள்ளனர். இந்த "எனது தமிழ்ப்பள்ளி" திட்டத்திற்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட மலேசிய தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Comments