இந்திரா காந்தி விவகாரத்தை கைவிட்டது ஏன்? தலையிட வேண்டாம் என்று நெருக்குதல் கொடுப்பது யார்? எம்.குலசேகரன் பதில் சொல்வாரா? ம.இ.கா சுபாஸ் சந்திரபோஸ் கேள்வி

இந்திரா காந்தி விவகாரத்தை கைவிட்டது ஏன்?
தலையிட வேண்டாம் என்று நெருக்குதல்  கொடுப்பது யார்?
எம்.குலசேகரன் பதில் சொல்வாரா?
ம.இ.கா சுபாஸ் சந்திரபோஸ் கேள்வி 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், பிப்.15- 
        இந்திரா காந்தி விவகாரத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொண்ட மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுக்கு "தலையிட வேண்டாம்" என்று நெருக்குதல் கொடுப்பது யார் என்று ம.இ.கா சுபாஸ் சந்திரபோஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு அமைச்சராக இருக்கும் குலசேகரன் நினைத்தால் இந்திரா காந்தி விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். ஆனால், அவர் இவ்விவகாரத்தில் தலையிட மறுப்பதற்கு என்ன காரணம்? உங்களை தலையிட வேண்டாம் என்று தடுப்பது யார் என்று பதில் சொல்லுங்கள் என்று சுபாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் எதிர்கட்சியாக இருந்த போது இந்திரா காந்தி விவகாரத்தில் குரல் கொடுத்த குலசேகரன் இனியும் தலையிட முடியாது என்று கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. அப்போது போராடிய மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் போராட தயக்கம் காட்டுவது அரசியல் பின்னனி காரணமா என்று சுபாஸ் வினவினார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடர்பில் இந்திரா காந்தியிடம் தொலைப்பேசி வழி தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். கடந்த காலத்தில் குலசேகரன் தமக்கு உதவி செய்ததாகவும் இப்போது உதவி செய்ய மறுப்பது வருத்தமளிப்பதாகவும் பல ஆண்டுகள் தமது மகள் பிரசன்னாவை பிரிந்து ஏக்கத்தில் பாதிப்படைந்துள்ள இந்திரா காந்தி தம்மிடம் தெரிவித்ததாக சுபாஸ் குறிப்பிட்டார்.

ஒரு தாயின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டு சென்று பேச முடியும். இந்தியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடப்பாடு அமைச்சர் குலசேகரனுக்கும் மற்ற இந்திய அமைச்சர்களுக்கும் உண்டு. எதிர்கட்சியாக இருந்தவர்கள் இப்போது ஆளுங்கட்சிக்கு வந்த பிறகு மௌன சாமியார் ஆகி விட்டார்கள் என்றார் சுபாஸ்.

"இந்திரா காந்தி விவகாரத்தில் தலையிட வேண்டாம்; உங்கள் வேலையைப் பாருங்கள்"  என்று கூறியது யார்? "எனினும் பின்னனியில் இருந்து இந்திரா காந்திக்கு உதவி செய்வேன்" என்று பகிரங்கமாக அறிக்கை விட்டுள்ள குலசேகரன் அதனை நேரடியாக செய்யாதது ஏன்? அரசியல் ரீதியில் நெருக்குதல் கொடுப்பது யார்? இந்த கேள்விகளுக்கு குலசேகரன் பதில் சொல்ல வேண்டும்  சுபாஸ் வலியுறுத்தினார்.

இந்தியர்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கிய குலசேகரன் இப்போது இதனை செயல்படுத்த தயங்குவது ஏன்? இந்தியர்களுக்கு வழங்கிய வாக்குறுதி என்னவாயிற்று? வழக்கறிஞராக இருந்து இந்திரா காந்தி விவகாரத்திற்கு குரல் கொடுத்த குலசேகரன் இப்போது ஆட்சியில், அதிகாரத்தில், அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் போது என்ன தீர்வு காண முடியவில்லை என்று சுபாஸ் கேள்வி எழுப்பினார்.

கடந்த 11.3.2009இல்  இந்திரா காந்தியின் கணவர் பத்மநாபன் முகமட் ரிட்சுவான் என்று ஒரு முஸ்லிமாக மதம் மாறியதோடு தனது மூன்று பிள்ளைகளையும் மதம் மாற்றி கடைசி பிள்ளையான பிரசன்னா டிக்‌ஷாவை தூக்கிச் சென்றுள்ளார். பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ஷாரியா நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார். இந்த வழக்கை ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் எடுத்து நடத்தினார்.

இந்நிலையில் கூட்டரசு நீதிமன்றம் தாயார் இந்திரா காந்தியின் அனுமதியில்லாமல் செய்யப்பட்ட மதமாற்றம் செல்லாது என்று அதனை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் முகமட் ரிட்சுவானை கைது செய்து இந்திராவின் மகள் பிரசன்னாவை மீட்கும்படி உத்தரவிடப்பட்ட நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments