நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பல தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததால் கேமரன் மலை கைவிட்டுப் போனது! செமினியிலும் அதேநிலை உருவாகலாம்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கருத்து

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பல தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததால் கேமரன் மலை கைவிட்டுப் போனது!
செமினியிலும் அதேநிலை உருவாகலாம்! 
-டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கருத்து

கோலாலம்பூர், பிப் 3-
நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பல தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததால் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி கைவிட்டுப் போனதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வர்ணித்துள்ளார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம்  இன்னும் பல சவால்களை சந்திக்கும். செமினி இடைத்தேர்தலில் இதே நிலை உருவாகலாம். நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஆட்டமெல்லாம் துன் டாக்டர் மகாதீர் பிரதமராக இருக்கும் வரைதான் என்று மத்திய செயலவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு கருத்துரைத்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பு அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்ததற்கு அவர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததுதான் முக்கிய காரணம். தேர்தல் சமயத்தில் பல வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். பிடிபிடிஎன் கடன் பெற்ற மாணவர்கள் 4 ஆயிரம் வெள்ளி சம்பளம் பெறும் வரையில் கடனை செலுத்த வேண்டாம் என்றார்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டம் வரையப்படும் என்றார்கள். டோல் கட்டணத்தை அகற்றுவோம் என்றார்கள். ஆனால், எதுவே நிறைவேற்றப்படாததுதான் கேமரன் மலை தோல்வி. தேர்தல்  வாக்குறுதிகளை மக்கள் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மறக்கமாட்டார்கள் என்றார் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியை இடை காலத்திற்கு மட்டுமே வழங்கியிருக்கிறோம். அடுத்த பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் ம.இ.கா கண்டிப்பாக போட்டியிடும். அதில் எந்த மாற்றமும்  இல்லை. நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். 15ஆவது பொதுத்தேர்தலில் அத்தொகுதியில் நாம்தான் போட்டியிடுவோம். அத்தொகுதி என்றும் ம.இ.கா தொகுதிதான் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

கேமரன் மலை   வெற்றியானது தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளது. இதன்வழி செமினி சட்டமன்றத் தொகுதியையும் தேசிய முன்னனி கைப்பற்றும். செமினி சட்டமன்றத் தொகுதியை மீட்பதற்கு   15ஆவது பொதுத்தேர்தலில்  நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை மக்களிடம் திரைபோட்டுக் காட்டினாலே போதுமானது என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். மக்களுக்கு உண்மை தெரிந்து விட்டது. இந்நிலையில் செமினி சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி கண்டிப்பாக கைப்பற்றும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Comments