அந்நிய வியாபாரிகளால் ஆண்டுக்கு 500 மில்லியன் வரை நஷ்டம்! - உள்ளூர் இந்திய வியபாரிகள் பரிதவிப்பு

அந்நிய வியாபாரிகளால் ஆண்டுக்கு 500 மில்லியன் வரை நஷ்டம்!
 - உள்ளூர் இந்திய வியபாரிகள் பரிதவிப்பு

கோலாலம்பூர்,மார்ச்,22-
    அந்திய சட்டவிரோத வியாபாரிகளால் உள்ளூர் இந்திய வியாபாரிகள் ஆண்டொன்றுக்கு சுமார் 500 கோடி வெள்ளி வரை நஷ்டமடைகின்றனர் என்று மலேசிய இந்து ஆகம அணி அமைப்பின் தலைவர் அருண் துரைசாமி கூறியுள்ளார்.

சுமார் 20,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு இந்திய சிறு வியாபாரிகள் திருவிழா, பெருவிழா சந்தை, பண்டிகை காலங்களில் ஜவுளி, பண்டு பாத்திரங்கள், அணிகலன்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களில் 70 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர். மேலும் இந்த பண்டிகை, திருவிழா, பெருவிழா சந்தை காலங்களுக்காக அவர்கள் ஆண்டுதோறும் காத்திருக்க வேண்டியதுள்ளது. காரணம் அக்காலகட்டத்தில்தான் வியாபாரத்தில் சற்று லாபம் பார்க்க முடிகின்றது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

 ஆயினும் அண்மைய காலங்களில் வெளி நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத வியாபாரிகளால் உள்நாட்டு வியாபாரிகள் பெரும் அளவில் நஷ்டமடைந்து வருகின்றனர்.

பொதுவாக உள்நாட்டு வியாபாரிகள் தங்களின் விற்பனை பொருட்களை முறையாக வரி செலுத்தி தருவிக்கின்றனர். மேலும் வியாபாரம் பதிவு, விற்பனை உரிமம் ஆகிய ஆவணங்களை பெற்றுதான் வியாபாரம் நடத்துகின்றனர்.

ஆனால், இந்த சட்டவிரோத அந்நிய வியபாரிகளோ தங்களின் விற்பனை பொருட்களை வரி ஏதும் செலுத்தாமல் “குருவி” என்றழைக்கப்படும் பண்ட மாற்று நபர்களின் வழி இங்கு தருவிக்கின்றனர்.

அவர்கள் பதிவு , உரிமம் ஏதும் பெறாமல்தான் தங்களின் வியபாரத்தை மேற்கொள்கின்றனர்.
இது போன்ற கூடுதல் கட்டணங்களை செலுத்தாததால் விற்பனை பொருட்களை சந்தை விலையை காட்டிலும் குறைவாக விற்கின்றனர்.

விலை குறைவினால் பெரும்பாலான வாடிக்கையாளர்களும் அவர்களிடத்தில்தான் பொருட்களை வாங்குகின்றனர். இதனால் உள்நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் படுநஷ்டமடைகின்றனர். இது அவர்களின் வாழ்வாதாரத்தையே பாதிப்படைய செய்கின்றது.

இந்த அந்நிய வியாபாரிகளால் தாங்கள் எதிர்நோக்கும் துன்பங்களை என்னிடத்தில் அண்மையில் விவரித்தனர். இதனால் அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு எல்லை இல்லை என அருண் விவரித்தார்.

உள்நாட்டு இந்திய வியாபாரிகள் நலன் கருதி இவ்விவகாரத்தில் நல்லதோர் தீர்வு கிடைக்க இந்து ஆகம அணியினர் இவ்வருடம் தொடக்கம் முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க துவங்கினோம்.

இதில் குறிப்பாக தைப்பூச திருவிழா நேரத்தில் பத்துமலை ஆலய வளாகத்தில் சுமார் 70 விழுக்காடு கடைகள் அந்நியர்களுக்கே வழங்கப்படுகிறது.


தைப்பூசத்தை அடுத்து மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி திருவிழாதான் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. எனவே திருவிழாவின் போது சட்டவிரோத அந்நிய வியாபாரிகள் அங்கு வியாபாரம் செய்ய கூடாது என அவ்வாலய நிர்வாகத்திடம் நாங்கள் முன்னமே வலியுறுத்திக் கேட்டுக் கொண்டோம்.

இது தொடர்பில் அவர்கள் எங்கள் தரப்பிடம் கடந்த மார்ச் 12ஆம் தேதி பேச்சு நடத்தினர். அப்பொழுது அவர்கள் திருவிழா நேரத்தின் பொழுது அந்நிய வியபாரிகளுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என எங்களிடம் உறுதியளித்தனர்.

இது குறித்து மறுநாள் பத்திரிகை சந்திப்பு கூட்டத்தையும அவர்கள் நடத்தினார். இருப்பினும் இந்த திருவிழாவில் அந்நிய வியாபாரிகளின் ஊடுருவலை தடுக்க குடிநுழைவுத் துறையின் உதவியோடு நாங்கள் சிறப்பு கண் காணிப்பு குழுவை அமைத்தோம்.

அதன் அடிப்படையில் இத்திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அந்நிய வியபாரிகள் வியபாரம் செய்வதை கண்டறிந்தோம்.
இருப்பினும் ஆலயத்தின் மாண்பை காக்க அதிரடி சோதனையை நாங்கள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

1 அல்லது 2 வியாபாரிகள் என்றால் ஊடுருவல் எனலாம். ஆனால், 100க்கும் மேற்பட்ட அந்நிய வியாபாரிகள் ஆலய வளாகத்தில் கடை அமைத்து வியபாரம் செய்வது என்றால் அது நிர்வாகத்தினர் அனுமதியின் அடிப்படையில்தான் நிகழ்ந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

அப்படியென்றால் முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் அவர்கள் எங்களிடத்தில் வழங்கிய வாக்குறுதி பொய் என்றே கருதப்படும். உள்நாட்டைச் சேர்ந்த இந்திய வியபாரிகளின் நலன் கருதி அவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் அந்நியர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் எங்களுக்கு கிடைத்த நம்பத்தக்க தகவலின்படி இத்திருவிழாவில் வியாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகளில் பெரும்பாலானோர் முறையான உரிமத்தை கொண்டிருக்கவில்லை.

அப்படி இருக்கையில் அவர்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கியது சட்டப்படி தவறாகும். ஆகவே, இவ்விவகாரம் தொடர்பில் இன்று தொடங்கி இன்னும் ஒரு வார கால அவகாசத்திற்குள் அவ்வாலய நிர்வாகம் முறையான விளக்கத்தை தர வேண்டும்.

ஒரு வேளை விளக்கம் தராவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் தயங்க மாட்டோம் என்றும் அருண் உறுதியளித்தார்.

இதற்கிடையே, இந்து ஆகம அணி இனி இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாக உற்று நோக்கும். வரும் திருவிழா, பெருவிழா சந்தை, பண்டிகை காலங்களில் நடத்தப்படும் விற்பனை சந்தைகளில் உள்நாட்டைச் சேர்ந்த இந்திய வியாபாரிகளுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இச்சந்தைகளில் சட்டவிரோத அந்நிய வியாபாரிகளின் ஊடுருவலை ஆணிவேர் வரை களைய வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கும் ஏற்பாட்டு குழுவினர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்விவகாரம் தொடர்பில் மிக கூடிய விரைவில் நாங்கள் உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளோம் என்றும் அருண் துரைசாமி உறுதியளித்தார்.

Comments