டத்தோஸ்ரீ நஜீப் வழங்கிய துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? -மனம் திறக்கிறார் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

டத்தோஸ்ரீ  நஜீப் வழங்கிய  துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்?
-மனம் திறக்கிறார் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

குணாளன் மணியம்

மலாக்கா, மார்ச் 27-
இந்திய சமுதாயத்திற்கு வழங்கிய பல வாக்குறுதிகளை மீறியதன் விளைவாகவே முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  வழங்கிய துணையமைச்சர்  பதவியை ராஜினாமா செய்ததாக  பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறியுள்ளார்.

இந்திய சமுதாயம் எதிர்நோக்கியுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்திய சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு  தீர்வு காண ஒப்புக் கொண்ட நஜிப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால், அவற்றில் ஒன்றைகூட நஜிப் நிறைவேற்றவில்லை என்று மலாக்கா இந்திய மக்களுடனான சந்திப்பில் மனம் திறந்து பேசினார் அமைச்சர் வேதமூர்த்தி.

எனக்கு அமைச்சர் பதவி பெரிதல்ல. இந்திய சமுதாயத்தின் நலன்தான் முக்கியம். இதற்காக 2007இல் ஹிண்ட்ராப் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி இந்தியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் 2008 தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

ஐந்து மாநிலம் எதிர்க்கட்சி வசமானது. இந்நிலையில் எதிர்க்கட்சியாக இருந்த நம்பிக்கை கூட்டணியை  பலமுறை அணுகியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று வேதமூர்த்தி தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்நிலையில் அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை அணுகி பலமுறை பேச்சு நடத்தினேன். அதன்பிறகே ஓப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். ஆனால், அவற்றில் ஒன்றைகூட டத்தோஸ்ரீ நஜிப் நிறைவேற்றவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்து பலமுறை நஜிப்பிடம் எடுத்துரைத்தேன். அவர் கண்டுகொள்ளவில்லை. கையெழுத்திட்டப் பிறகும் அந்த ஒப்பந்தங்களை நஜிப் நிறைவேற்றாதது ஏன் என்று தெரியவில்லை. அவருக்கு யாரோ தவறான போதனைகளை வழங்கி விட்டார்கள் என்று தாம் நம்பியதாக வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

துணையமைச்சர் பதவியில் 8 மாதங்கள் வரையில் நீடித்தேன். இந்த காலகட்டத்தில் இந்தியர்கள் தொடர்பான பல ஒப்பந்தங்கள் குறித்து நஜிப்பிடம் அடிக்கடி ஞாபகப்படுத்தி வந்தேன். ஆனால், நஜிப் அப்போதும் கண்டு கொள்ளவில்லை. இதனால் துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறினேன்.

அப்போதும் நஜிப் அசரவில்லை. இதனால் வேறுவழியின்றி பதவியை ராஜினாமா செய்தேன். இந்திய மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய நஜிப் வழங்கிய துணையமைச்சர் பதவியில் சுகம் காண நான் விரும்பவில்லை. நான் பதவி விலக  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின்  நடவடிக்கைதான் மூலக்காரணம் என்று ஹிண்ட்ராப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

Comments