இந்திரா காந்தியை நடுத்தெருவில் விட்டு விட்டீர்கள்! உங்கள் அரசியல் கபட நாடகத்தை நிறுத்துங்கள்! சிவநேசனுக்கு ம.இ.கா குணாளன் சாட்டை

இந்திரா காந்தியை நடுத்தெருவில் விட்டு விட்டீர்கள்!
உங்கள் அரசியல் கபட நாடகத்தை நிறுத்துங்கள்!
சிவநேசனுக்கு ம.இ.கா குணாளன் சாட்டை

கோலாலம்பூர், மார்ச் 31--
ம.இ.கா பாஸ் கட்சியுடன் மேற்கொண்டுள்ள கூட்டணி தொடர்பில் ஜனநாயக செயல்கட்சித் தலைவரும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசனின் அறிக்கை "ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது என்று ம.இ.கா தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் வே.குணாளன் சாடியுள்ளார்.

ம.இ.காவின் அரசியல் எதிர்காலத்திற்கும் இன்னும் ம.இ.காவை நம்பி வாழும் மலேசிய இந்தியர்களுக்கும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இடம்பெற வலுவான கட்சியாக ம.இ.காவை உருமாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் பாஸ் கட்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நட்புறவு நடவடிக்கை என்று சிப்பாங. ம.இ.கா தொகுதித் தலைவருமான வே.குணாளன் தெளிவுபடுத்தினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத சிவநேசன் புலம்புவது வேடிக்கையாக உள்ளது. சிவநேசன் தொடர்ந்து இந்திய சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் நாடகம் நடந்த வேண்டாம். சிவநேசன் அவர்களே, பாஸ் கட்சியுடன் முதலில் கட்டிப்புரண்டது யார்? பாஸ் கட்சியுடன் ம.இ.கா ஒரு சகாப்தத்தை  உருவாக்கிக் கொண்டுள்ளது. இதன்வழி அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.காவின் வேட்பாளர்கள் முதன்மையாக வெற்றி பெற்று விடுவார்கள். இப்படி செய்வதன் வழி ம.இ.கா ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் ஆதரவைப் பெற்றுவிடும் என்ற பயமும் பொறாமையும் உங்கள் கண்களில் தெரிகின்றது என்றார் குணாளன்.

கடந்த 2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் கூட்டணியில் இணைந்திருந்த பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் சட்டவிதி 355  கீழ் தனிநபராக ஹுடுட் சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்த போது, அவருடன் கூட்டு சேர்ந்த இன்றைய அமனா கட்சியைச் சேர்ந்தவர்கள், முன்னாள் பாஸ் கட்சித் தலைவர்கள் என்ற கூற்றை மறந்து அல்லது மறைத்து சிவநேசன் கூறுவது வேதனையாக உள்ளது. அன்று பாஸ் கட்சிக்கு துணை போன அமனா கட்சித் தலைவருடன் கூட்டு சேர்ந்து அரசியல் நாடகம் நடத்துவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அது எப்படி சிவநேசன் அவர்களே, உங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயம்?  இதுபோன்ற துப்புக் கெட்ட அரசியல் தேவைதானா? ம.இ.கா மீது சவாரி செய்து உங்கள் தன்மானமற்ற அரசியல் நாடகத்தை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். திருமதி இந்திரா காந்தியின் பிள்ளைகள் கணவரால் மதம் மாற்றப்பட்ட விவகாரம் நீங்கள் பாஸ் கட்சியுடன் உருண்டு பிரண்ட காலத்தில் உருவான விவகாரம். இந்திரா காந்தி கணவர் கிளந்தான் மாநிலத்தில் இருந்தார் என கூறப்பட்டது. நீங்கள் ஏன் பாஸ் கட்சித் தலைவரை தட்டிக் கேட்கவில்லை?

நீங்களும் ஜசெகவின் முன்னோடித் தலைவர்களும் சுயநல அரசியல் லாபத்திற்காக இந்திரா காந்தி விவகாரத்தை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டு இன்று நீங்கள் பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் குலசேகரன் மத்திய அமைச்சராகவும் இருக்கிறீர்கள். ஆனால், இந்திரா காந்தியை நடுத்தெருவில் விட்டு ஒன்று செய்ய முடியாது என்று வாய் கூசாமல் கூறி இருவரும் கைவிரிந்து விட்டீர்கள். ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு அல்வா கொடுத்து விட்டதை மறந்து விடாதீர்கள்.

ம.இ.காவிற்கு என்று ஒரு கொள்கை இருக்கின்றது. உங்களைப் போல் வெறும் அரசியல் லாபத்திற்காக தன்மானத்தை அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் சுயநலத்திற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட வெற்று வாக்குறுதிகள் காற்றில் பறந்து அரசியல் சாயம் வெளுத்துக் கொண்டிருப்பதை மறந்து விடாதீர்கள் என்று வே.குணாளன் சுட்டிக் காட்டினார்.

தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் திருமதி இந்திரா காந்தி கணவருக்குக்கு எதிராக  தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.  அவர் கிளந்தானில் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும் ஏன் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை? ஆட்சியைப் பிடித்து ஓராண்டு காலம் நிறைவடையப் போகும் நிலையில் அதிகாரம் இருந்தும் ஏன் இந்திரா காந்தி கணவரை கைது செய்ய முடியவில்லை? ஆனால், இந்தோனேசியாவில் மறைந்திருந்த தேசிய முன்னணி ஜமாலை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது. இதில் உங்கள் அரசியல் நாடக அரங்கேற்றம் எல்லோருக்கும் தெரிகின்றது.

சிவநேசன் அவர்களே, நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் இன்னும் எத்தனை நாளைக்கு ம.இ.காவை சாடி உங்கள் சுயநல அரசியல் நாடகம் நடத்தப் போகின்றீர்கள்? மலேசிய இந்தியர்கள் மத்தியில் இனியும் உங்களது "மக்களை  முட்டாளாக்கும்" அரசியல் நாடகம் எடுபடாது. ஆகவே, மற்றவர்களை சாடி அரசியல் பிழைப்பு நடத்தும் உங்களது போக்கை மாற்றி, பதவியில் இருக்கும் காலத்தில் உருப்படியாக சமூகத்திற்கு ஏதாவது நல்லதை செய்யப் பாருங்கள் என்று வே.குணாளன் ஆலோசனை கூறினார்.

Comments