மக்கள் ஆதரவிற்காக இன உணர்வைத் தூண்டக்கூடாது: -ஒற்றுமை அமைச்சர் பொன். வேதமூர்த்தி.

மக்கள் ஆதரவிற்காக இன உணர்வைத் தூண்டக்கூடாது:
-ஒற்றுமை அமைச்சர் பொன். வேதமூர்த்தி.

மலாக்கா, மார்ச் 11-
இன உணர்வைத் தூண்டி விட்டு அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காகவும் மக்களின் ஆதரவைப் பெறவும் இனப் பிரச்சினைகளை முன்னிலைப் படுத்தும் போக்கு மலேசிய மக்களிடையே நிலவும் ஒருமைப்பாட்டை சிதைக்கக் கூடியது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தலைமையில் ஒரே மலேசிய சிந்தனைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. ஆனால், அந்த சிந்தனை இப்போது புறந்தள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT ADVERTISEMENT

62 ஆண்டு கால சுதந்திர வாழ்வை எட்டியுள்ள தற்போதைய சூழலில், மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இன உணர்வைத் தூண்டும் போக்கு இதுவரை மலேசிய மக்கள் காத்துவரும் நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையும் என்று கடந்த சனிக்கிழமை மலாக்கா, தஞ்சோங் மிஞ்ஞாக் வட்டாரத்தில் சீன வழிபாட்டுத் தல நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி அவ்வாறு குறிப்பிட்டார்.

மலேசியர் அனைவருக்கும் எல்லாமட்டத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வேலைவாய்ப்பில் பிரிவினை கூடாதென்று தனியார் துறையில் குறிப்பிட்ட ஒருசில வட்டத்தில் வேலைவாய்ப்பைப் பெறுவதில் மலாய், இந்திய சமூகத்தினர் பின்னடைவை எதிர்கொள்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர் என்று அண்மையில் தனியார் ஆய்வாளர் வெளியிட்ட தகவல் குறித்து, செய்தியாளர்கள் வினவியபோது அமைச்சர் மேலும் சொன்னார்.

மக்களிடையே இன இணக்கமும் ஒருமைப்பாட்டு உணர்வும் இன்னும் மேம்பட ஒற்றுமைத் துறை சார்பில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

Comments