பூர்வக்குடி மக்களின் மேம்பாட்டில் நம்பிக்கைக் கூட்டணி அரசு முழு ஈடுபாடு கொண்டுள்ளது -ஒற்றுமை அமைச்சர் பொன். வேதமூர்த்தி

பூர்வக்குடி மக்களின் மேம்பாட்டில் நம்பிக்கைக் கூட்டணி அரசு முழு ஈடுபாடு கொண்டுள்ளது
-ஒற்றுமை அமைச்சர் பொன். வேதமூர்த்தி

புத்ராஜெயா, மார்ச் 29-
பூர்வகுடி மக்களும் மற்ற இனங்களைப் போல நாட்டின் சமூக - பொருளாதார மேம்பாட்டில் பயன் பெறுவதற்கான நடவடிக்கையை நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

இந்த மண்ணின் சுதேசி மக்களான இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயவும் அதற்கான தீர்வை எட்டவும் ஏப்ரல் 22-ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பூர்வகுடி மாநாடு அதற்கான சான்றாகும் என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

புத்ராஜெயாவின் ஏனோதானோ மனப்பான்மையினால் பூர்வகுடி மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கையும் தோல்வியில் முடிந்ததாக அந்த சமூகத்தின் செயற்பாட்டாளர் தெரிவித்த கருத்து இணைய ஊடகங்களில் வெள்ளிக்கிழமை பிரதிபலித்ததன் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அறுபது ஆண்டுகளாக முந்தைய ஆட்சியால் புறக்கணிக்கப்பட்டிருந்த  இந்த சமூகத்தின்பால் தற்போதைய அரசு உண்மையில் கரிசனம் கொண்டுள்ளது.

 பல்வேறு கட்டங்களில் பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் வழி, பூர்வகுடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தேசிய அளவில் ஏறக்குறைய ஒன்றாகத்தான் உள்ளது.

அடிப்படைத் தேவை, தங்களின் பாரம்பரிய நிலம், சாலைத் தொடர்பு, வீட்டுவசதி, தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் உதவி நிதி உட்பட்ட கோரிக்கைதான் பொதுவாக பூர்வகுடி சமுதாயத்தால் முன்வைக்கப்படுகின்றன.

ஏறக்குறைய இரண்டு இலட்ச மக்கள் தொகையைக் கொண்ட இந்த சமூகத்தின் பிரச்சினைகளை ஆலோசிக்கவும் அதற்கான தீர்வை எட்டவும் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் துன் மகாதீரால் தொடக்கி வைக்கப்படும் இந்த மாநாட்டில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

அத்துடன் பூர்வகுடி மக்கள் தொடர்பான அமைச்சகங்களின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டு குழு அடிப்படையில் ஆலோசனை நட்த்தவிருக்கின்றனர்.

இதில் குறிப்பாக, தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் சார்பில் கிளந்தான் மாநில அரசுக்கு எதிராக பூர்வகுடி சமுதாயத்தின் சார்பில் வழக்கு சார்பு செய்யப்பட்டுள்ளதும் நம்பிக்கைக்கூட்டணி அரசு இந்த சமூகத்தின்பால் கொண்டுள்ள அக்கறைக்கு மற்றொரு சான்றாகும். அத்துடன் அவர்களின் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டவும் புதிய அரசு முனைப்பு கொண்டுள்ளது.

இவ்வாறாக, பூர்வகுடி சமுதாயத்தின் உணர்வை மதித்து, அவர்களின் எதிர்பார்ப்பு, தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை, அவர்களின் மீட்சிக்காக நம்பிக்கைக் கூட்டணி அரசு உண்மையான அக்கறையோடும் உறுதிப்பாட்டோடும் உரிய வகையில் திட்டமிட்டும் செயலாற்றியும் வருகிறது.

குறிப்பாக, கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலின்போது இந்த சுதேசி மக்களுக்காக அளிக்கப்பட்ட 34 வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்டுகிறது;  அவர்களுக்காக குறுகிய  மற்றும் நீண்ட காலத் திட்டங்களையும் வகுத்துj வருகிறது. அதன் அடிப்படையில் பூர்வகுடி மக்கள் மேம்பாட்டு வாரியத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் அரசு மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments