பூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள் - ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

பூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள்
- ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

          மித்ரன்

புத்ராஜெயா, ஏப்ரல் 23-
புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் ஏப்ரல் 22 திங்கட்கிழமை நடைபெற்ற பூர்வகுடி தேசிய மாநாட்டில் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மாநாட்டுத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கூறினார்.

 இவற்றில் பூர்வ குடிமக்களின் பாரம்பரிய நிலம்,  கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தலைமைத்துவம், அடிப்படை கட்டமைப்பு, பண்பாடு ஆகிய ஏழு அம்சங்கள் குறித்த தீர்மானங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன.

நிலம் குறித்த தீர்மானத்தில், பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நிலம், 134ஆவது சட்டம் அல்லது நாட்டின்  நிலக் குறியீட்டின் அடிப்படையில் அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும் எனபது ஒரு மைல்கல் தீர்மானம் என்று மாநாட்டு நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அமைச்சர் வேதமூர்த்தி  தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

பூர்வகுடி சமுதாயத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலான நிலமும் பதிவு செய்யப்படும்.
அதைப்போல கல்வித் தீர்மானத்தைப் பொருத்தவரை, பூர்வகுடி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பால்ய வயதில் மணம் முடிப்பதைக் காட்டிலும் அவர்களின் கல்வி மேம்பாட்டில் அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

சுகாதார பாதுகாப்பிற்காக, சுகாதாரத் துறை, பூர்வகுடி மேம்பாட்டுப் பிரிவு(JAKOA), பூர்வகுடி பிரதிநிதிகள் ஆகிய முத்தரப்பு கொண்ட சுகாதார செயற்குழு அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர் பொருளாதாரம் குறித்த தீர்மானத்தில், பூர்வகுடி தொழில்  முனைவோர் வங்கிக் கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பூர்வகுடியினர் தங்களின் வட்டாரப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சரவாக் மாநிலத்தில் உள்ள நடைமுறையைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதைப்போல, பூர்வகுடி இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும்  கலைஞர்களின் வளர்ச்சிக்கும் போதிய நிதி ஒதுக்கும்படி மற்றொரு தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விவரித்தார்.

முன்னதாக காலையில் மாநாடு தொடங்கிய போது தேசிய ஒற்றுமை மற்றும் சமூல நல அமைச்சருமான பொன். வேதமூர்த்தியின்  வரவேற்புரை, பூர்வகுடி சமூகத் தலைவர் முகமது பின் நோகிங் உரையைத் தொடர்ந்து பிரதமர் துன் மகாதீர் தலைமை உரை ஆற்றினார்.

பிற்பகலில் குழு அடிப்படையிலான கருத்தரங்குகள் நடைபெற்றன. ஏப்ரல் 22 திங்கட்கிழமை முழு நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பூர்வகுடி சமூகத்தின் வட்டாரத்  தலைவர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்பினர் என ஏறக்குறைய 1,200 பேர் கலந்து கொண்டனர். பூர்வகுடி சமூகத்தில் இருந்து ஏராளமான பெண்களும் இந்த முழுநாள் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

நிறைவாக இந்த மாநாட்டு தொடர்பில் பணியாற்றிய அனைத்துத் தரப்பினருக்கும் செய்தியாளர்களுக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பின் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

Comments