இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீடு அமைச்சரவை நல்லதொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் பத்து எம்.பி. பிரபாகரன் வலியுறுத்து

இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் இட ஒதுக்கீடு
அமைச்சரவை நல்லதொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்
பத்து எம்.பி. பிரபாகரன் வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப்ரல் 23-
நாடு தழுவிய நிலையில் உள்ள இந்தியர்கள் அரசியல் கொள்கை, நம்பிக்கைகளை தாண்டி ஒரே குரலில் முன்வைத்து வரும் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன்
இட ஒதுக்கீடு விவகாரத்திற்கு ஏப்ரல் 24 புதன்கிழமை கூடும்  அமைச்சரவை சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வலியுறுத்தினார்.

கடந்த சில தினங்களாக  சமூகத்தின் எல்லா நிலையிலும் மெட்ரிகுலேசன் விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை
நடைபெறும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய மாணவர்களின் மெட்ரிகுலேசன் வாய்ப்பு குறித்து விவாதிக்கப்படும் என்பதால் நல்லதொரு தீர்வு பிறக்கும் என்று தாம் நம்புவதாக பிரபாகரன் தெரிவித்தார்.

நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப இந்திய சமூகத்தின் அரசியல், சமூகம், பொருளாதாரம் முன்னேற்றம் இல்லை என மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் தான் கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பாலான இந்தியர்கள் பாக்காதான் அரசாங்கத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.

மூன்று தலைமுறை காலம் உடல் உழைப்பு சமூகமாக இம்மண்ணில் வாழும்
இந்திய சமூகம் கல்வி வாய்ப்புகளின் மூலம் தனது முகவரியை மாற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.

அந்த வாய்ப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் வாய்ப்பு குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இந்திய சமூகத்தில் இடியாய் இறங்கி உள்ளது.

ஒரு சராசரி இந்தியரின் அரசியல் பார்வையில், கடந்த காலத்தில் அரசாங்கத்தில் ஒரே ஒரு இந்திய அமைச்சர் இருந்த காலத்தில் 2,200 இடம் கிடைத்தது. தற்போது நான்கு இந்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். கூடுதல் இடம் கிடைக்க வழி செய்திருக்க வேண்டும்.

கூடுதல் இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஏற்கனவே பெற்றதை நிலைநிறுத்திக் கொள்ளவதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய சமூகம் முன் வைக்கும் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசாங்கம் உணர வேண்டும் என்று பிரபாகரன் குறிப்பிட்டார்.

Comments