தேசிய ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேசிய ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

தேசிய ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்போர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தேசிய ஒற்றுமை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி.

புத்ராஜெயா, ஏப்ரல் 29- இந்து சமயத்தை சிறுமைப்படுத்தி பேசிய ஜம்ரி வினோத் காளிமுத்து மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கை நாட்டில் சலசலப்புக்கு இடமளிக்கும் வகையில் இனத்தையும் சமயத்தையும் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முனையும் மலேசியர் யாவருக்கும் தக்கப் பாடமாக அமைய வேண்டும் என்று வேதமூர்த்தி கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஸம்ரி வினோத்தின் இத்தகைய வெறுப்புப் பேச்சு, இனங்களுக்கு இடையே நிலவும் ஒற்றுமைக்கும் இணக்கத்திற்கும் ஊறுவிளைவிக்கும் அதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைக்கு அடித்தளம் அமைக்கும் என்றார் வேதமூர்த்தி.

நிந்தனைப் பேச்சாளர் ஸம்ரி வினோத்திற்கு எதிராக இதுவரை ஏறக்குறைய 800க்கும் மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மலேசியவாழ் இந்துப் பெருமக்களை எந்த அளவுக்கு காயப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது.

இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றுவரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு, தீவிரவாதத் தன்மைதான் அடித்தளமாக அமைகிறது. ஸம்ரியைப் போன்றவர்களுக்கு சட்டத்தின் வலிமை என்ன என்பதைப் புரியவைத்தால்தான் அவரைப்போல சமயத்தை ஒரு துருப்புச் சீட்டாக தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்த விரும்பும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

நாட்டில் இனங்களுக்கிடையே நிலவும் ஒற்றுமைக்கும் சமயங்களுக்கு இடையே பேணப்படும் நல்லிணக்கத்திற்கும் கேடு செய்யும் விதமாக பேசிய ஸம்ரி வினோத்திற்கு எதிராக போலீசார் பீனல் கோட் சட்டம் 298-ஏ பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னைத்தானே பிரகடனம் செய்துகொண்ட இந்த நிந்தனைப் பேச்சாளர், இணைய சேவையை முறையற்ற வகையில் பயன்படுத்தியதற்காக ‘1998 தகவல் மற்றும் பல்லூடகச் சட்ட’த்தின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

எனவே, மலேசிய மக்களால் காலங்காலமாக நிலைநாட்டப்படும் தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் ஸம்ரி வினோத் போன்ற சக்திகள்மீது நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் மூலம் போலீசார் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments