குடும்ப நலம் நாட்டு நலனுக்கு அடித்தளம்! ஒற்றுமை அமைச்சர் பொன். வேதமூர்த்தி

குடும்ப நலம் நாட்டு நலனுக்கு அடித்தளம்!
ஒற்றுமை அமைச்சர் பொன். வேதமூர்த்தி

ஈப்போ, ஏப்ரல் 28-
குடும்பங்களில் நிலவும் நல்லுறவும் அரவணைக்கும் தன்மையும் கணவன்-மனைவி இருவரிடையே பேணப்படும் இணக்கமும்தான் சமூக நல்லிணக்கத்திற்கு அடிப்படையும் ஆதாரமும் ஆகும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

ADVERTISEMENT

 ADVERTISEMENT

பரபரப்பான வாழ்க்கையில் மூழ்கியுள்ள மலேசிய மக்களிடையே, குறிப்பாக குடும்பத் தலைவருக்கும் தலைவிக்கும் ஒருசேர இன்பத்தையும் இளைப்பாறுதலையும் அளிக்கும் விதமாக ‘அன்பான ஜோடி விழா  2019’ என்னும் குடும்பப் பாங்கான நிகழ்ச்சியை பேராக், உலு கிந்தா நகரில் ஏற்பாடு செய்த மலேசிய பன்னாட்டு அமைதிக் கூட்டமைப்பை மிகவும் பாராட்டுவதாக இந்த நிகழ்ச்சியில் தன் இல்லத்தரசியுடன் கலந்து கொண்ட தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

இனம், மொழி கடந்து இங்கு கூடியுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட தம்பதியரைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டும் மலேசிய மக்களுக்கு இந்த நிகழ்ச்சி தக்க சான்றாகும்.

தம்பதியினரிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை, ஒன்றுபட்ட சிந்தனை, கூட்டுப் பொறுப்பு, பிள்ளைகளை உருவாக்குவதில் புரியும் தியாகம் என்றெல்லாம் அன்பான குடும்பத்தை வழிநடத்தும் கூட்டு முயற்சிதான் நாட்டைக் கட்டமைக்கு கூறுகளில் முதன்மையாக விளங்குகிறது.

இதுபோன்ற குடும்ப நிகழ்ச்சிகளையும் கல்வி நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவரும்  மலேசிய பன்னாட்டு அமைதிக் கூட்டமைப்பின் பங்கு பாராட்டுக்கு உரியது. இதன்வழி, பண்பாடு, மொழி, சமயம், இனம் கடந்து அனைத்து மக்களையும் அழைத்து கலந்துறவாடச் செய்வதன் மூலம் மக்களிடையே நல்லுறவும் கருத்துப் பரிமாற்றமும் மேலும் செழிக்கும்.

தேச ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இதுபோன்ற அரசு சாரா அமைப்புகள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுவதாக கடந்த ஏப்ரல் 27 சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றியபோது அமைச்சர் மேலும் பேசினார்.

Comments