மெட்ரிக்குலேசன் விவகாரம்! ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை பாதித்துள்ளது! ஹிண்ட்ராப் எழுச்சியை நினைவில் கொள்வீர் -கல்வி அமைச்சுக்கு செயலாளர் முனியாண்டி நினைவுறுத்தல்

மெட்ரிக்குலேசன் விவகாரம்!
ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை பாதித்துள்ளது!
ஹிண்ட்ராப் எழுச்சியை நினைவில் கொள்வீர்
-கல்வி அமைச்சுக்கு செயலாளர் முனியாண்டி நினைவுறுத்தல்

கூலிம், ஏப்ரல் 18-
மெட்ரிக்குலேசன் விவகாரம் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தை பாதித்துள்ளதால் கல்வி அமைச்சு ஹிண்ட்ராப் எழுச்சியை கருத்தில் கொண்டு தீர்வு காண முயல வேண்டும் என்று செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இன்றைய ஆட்சிக்கு ஹிண்ட்ராப்  எழுச்சியே அடித்தளம் அமைத்திருந்தது.  இதனை எப்போதுமே
கல்வி அமைச்சு நினைவில் கொள்ள வேண்டும். அன்றைய ஹிண்ட்ராஃப் எழுச்சிப் போராட்டமே இன்றைய ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது. ஆட்சிக்கு அடித்தளம் அமைத்த ஹிண்ட்ராப் போராட்டத்திற்கு வித்திட்ட  இந்திய மக்களின் தியாகத்தை கல்வி அமைச்சு ஒரு போதும் மறக்கக் கூடாது என்று முனியாண்டி தெரிவித்தார்.

2019 கல்வி ஆண்டில் முதல் தவணைக்கான மெட்ரிக்குலேசன் கல்வி வாய்ப்பு பெரும்பாலான இந்திய மாணவர்களுக்கு கிடைக்காதது சம்பந்தப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோரை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தையே பாதித்துள்ளது என்று ஹிண்ட்ராஃப் தேசியப் பொதுச் செயலாளர் முனியாண்டி பொன்னுசாமி சொன்னார்.

இந்திய சமுதாயம் இன்னும் தலையெடுக்காத நிலையில், அவர்களுக்கு கல்வி வாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கடப்பாடு புதிய அரசுக்கு, குறிப்பாக கல்வி அமைச்சுக்கு இருக்கிறது.

பன்னிரண்டாவது பொதுத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் எழுச்சியின் தாக்கம், அந்தத் தேர்தலிலேயே பிரதிபலித்தது. அடுத்த 13-ஆவது பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராஃப்பின் தாக்கம் இன்னும் அதிகரித்த நிலையில், சுமார் ஓராண்டுக்கு முன் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 85 விழுக்காட்டு இந்திய வாக்காளர்கள் அணி திரண்டு அளித்த ஆதரவு, இன்றைய நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு மிகப்பெரும் அடித்தளம் ஆகும்.

இப்படிப்பட்ட நிலையில், இந்திய சமுதாயத்திற்கு நன்றி பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கல்வி அமைச்சு இப்படி, நல்ல தகுதியுள்ள மாணவர்களுக்குக்கூட மெட்ரிக்குலேசன் வாய்ப்பு மறுத்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. ஹிண்ட்ராஃப் எழுச்சிக்குப் பின் அண்மைய ஆண்டுகளில், இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு ஓரளவிற்கு அளிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு புதிய கல்வி அமைச்சரின் தலைமையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சர் மஸ்லி மாலேக் அல்லது அமைச்சின் அதிகாரிகள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது இன்னும் வேதனைக்குரியது. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலும் நாடு தோட்டத் தொழில் பொருளாதாரத்தை பெரிதும் நம்பியிருந்த காலத்தில் ரப்பர் தோட்டங்களில் கடுமையாக உழைத்து நாட்டிற்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள் இந்திய தோட்டப் பாட்டாளிகள்.

அப்படிப்பட்ட சமுதாயம் இன்னமும் பின் தங்கித்தான் இருக்க வேண்டுமா? கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதும் பின்னர் கூக்குரல் எழுப்புவதும் இன்னும் எத்தனைக் காலத்திற்கு தொடர வேண்டும்? எனவே, இப்பொழுதாவது தகுதி படைத்த இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் கல்வியில் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கல்வி அமைச்சும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அறிக்கை ஒன்றில் முனியாண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments