பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்பு 2019 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அபார சாதனை - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பாராட்டு

பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்பு 2019
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அபார சாதனை 
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பாராட்டு

கோலாலம்பூர், மே 5-
பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்பில் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் புரிந்துள்ள அபார சாதனையைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அதேவேளை, அவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமுர்த்தி கூறினார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

கோலாலம்பூர், கேஎல்சிசி மாநாட்டு அரங்கத்தில் மே திங்கள் 2 முதல் 4-ஆம் நாள் வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக் கண்காட்சியில் 25 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 70 குழுவினர் கலந்து கொண்டு 31 தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தனர்.

‘ITEX’  என்று சுறுக்கமாக அழைக்கப்படும் இந்தப் போட்டி, இளந்தலைமுறையினரிடையே புத்தாக்க சிந்தனை, அறிவியல் மனப்பான்மை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற சிந்தனைகளை உருவாக்குவதற்காக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கண்காட்சியில் 20 நாடுகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் காஜாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.  அதைப்போல யாஹ்யா அவால் தமிழ்ப் பள்ளியும் கின்றாரா தமிழ்ப் பள்ளியும் தலா 4 தங்கப் பதக்கங்களை வென்றன. இந்திய மாணவர்கள் 32 வெள்ளிப் பதக்கங்களையும் 7 வெண்கலப் பதக்கங்களையிம் வாரிக் குவித்து சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் புறநகர்ப் பகுதியான தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளி மாணவர்கள், அலுமினியக் கலன் அழுத்தும் கருவி(DACC)-க்கான கண்டு பிடிப்பில் ஈடுபட்டனர்.

இவ்வாண்டு பன்னாட்டு புத்தாக்க தொழில்நுட்பக் கண்காட்சியில், நம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இந்த அளவிற்கு சாதனைப் படைப்பதற்காக இரவு பகல் பாராமல் ஓய்வைக் கருதாமல் பாடுபட்ட ஆசிரியப் பெருமக்களும் உறுதுணையாக இருந்த பெற்றோரும் பாராட்டிற்கு உரியவர்கள் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Comments