பட்டதாரி மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற திறன்களை கொண்டிருக்க வேண்டும் ஸ்ரீ முருகன் கல்வி நிலைய இயக்குநர் சுரேந்திரன் கந்தா வலியுறுத்து

பட்டதாரி மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற திறன்களை கொண்டிருக்க வேண்டும்
ஸ்ரீ முருகன் கல்வி நிலைய இயக்குநர் சுரேந்திரன் கந்தா வலியுறுத்து

குணாளன் மணியம்
படங்கள்: ஜி.முகேஸ்வரன்

பெட்டாலிங் ஜெயா, மே 26-
பட்டதாரி மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற திறன்களை கொண்டிருக்க வேண்டும்
ஸ்ரீ முருகன் கல்வி நிலைய இயக்குநர் சுரேந்திரன் கந்தா வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

உயர்கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்ற கேள்வியோடு படித்து பட்டதாரியான பல மாணவர்கள் படிப்புக்கு தொடர்பில்லாத பல வேலைகளில் பணியாற்றி வருவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். இந்த சூழலை மாற்றியமைக்க பட்டதாரி மாணவர்கள் காலத்திற்கேற்ப திறன்களை கொண்டிருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பட்டதாரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.

இந்த உலகம் தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில்  பிலிம் கொண்டு படம் பிடித்தார்கள். இந்த நவீன யுகத்தில் அது மாறி விட்டது. பிலிம் இல்லாமல் படத்தை பிரிண்ட் போடாமல் பயன்படுத்தும் நிலை உருவாகி விட்டது. மனிதர்கள் செய்த வேலையை இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி இயந்திரத்தை செய்ய வைத்துள்ளது என்று சுரேந்திரன் கூறினார்.

இத்தகைய சூழலில் பட்டதாரி மாணவர்கள் படித்த துறைக்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைக்காமல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற தகுதியை தங்களுக்குள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் வெளிநாடு போய் வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இருந்த இடத்தில் இருந்து வெளிநாட்டில் இணையம் மூலம் வேலை செய்து சம்பாதிக்கும் யுகத்தில் நாம் இருக்கிறோம் என்றார் அவர்.

இந்த கால மேம்பாட்டிற்கு ஏற்ற தொழில்நுட்ப திறன்களை பட்டதாரி மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும். கணினியில் திறன்பெற்ற மாணவர்களின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். இதில் குறிப்பாக சைபர் செக்கியூரிட்டி துறை வேலை வாய்ப்பு மிகுந்த துறையாகும். நவீன தொழில் நுட்பத்தில்  சைபர் செக்கியூரிட்டி குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க அது சார்ந்த கல்வி மிகவும் அவசியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்று சுரேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த உலகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆகையால், மாணவர்கள் குறிப்பாக பட்டதாரி மாணவர்கள் இந்த தொழில் நுட்ப மாற்றத்திற்கு ஏற்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுரேந்திரன் கந்தா வலியுறுத்தினார்.

இந்த வேலை வாய்ப்பு கருத்தரங்கில் சைபர் செக்கியூரிட்டி குறித்து திருமதி கவிதா, டாக்டர் சந்திரன் இருவரும் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். (இவர்களின் விரிவான பேட்டி நாளை திங்கட்கிழமை இடம்பெறும்)

Comments