இந்திய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உருமிமேள கலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வோம் மலேசிய உருமிமேள இசை இயக்கத்தின் துணைத் தலைவர் சி.ஆர்.விக்கி

இந்திய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உருமிமேள கலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வோம் 
 மலேசிய உருமிமேள இசை இயக்கத்தின் துணைத் தலைவர் சி.ஆர்.விக்கி 

குணாளன் மணியம்

பூச்சோங், மே 24-
இந்திய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் உருமிமேள கலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மலேசிய உருமிமேள இசை இயக்கம் பாடுபடும் என்று அதன் துணைத் தலைவர் சி.ஆர்.விக்கி கூறியுள்ளார்.

உருமிமேள கலைஞர்கள் என்றாலே ஒரு மாதிரியாக எடை போடுகிறார்கள். உருமிமேளம்  ஒரு பாரம்பரிய கலை. இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால், இக்கலைக்கு உயிர் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும் என்று பூச்சோங் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலய வளாகத்தில் நடைபெற்ற மலேசிய தமிழர் திருநாள் கலைவிழாவில் சி.ஆர்.விக்கி அவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

மலேசிய உருமிமேள இசை இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் நல்ல முறையில் உருமிமேள கலையில் ஈடுபட்டு வருகின்றனர். உருமிமேள இயக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்வில் 500 உருமி மேள கலைஞர்களும் பொதுமக்களுமாக சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டது உருமிமேள இசைக்கலைஞர்களுக்கு பெருமையான விஷயமாகும் என்று சி.ஆர்.விக்கி சொன்னார்.

உருமிமேள கலை இளைஞர்களை நல்வழிப்படுத்தும். தீயவழிக்கு செல்வதை தடுக்கும். ஆகையால், உருமிமேள கலையின் வழி இளைஞர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மலேசிய உருமிமேள இசை இயக்கம் பாடுபடும் என்று சி.ஆர்.விக்கி குறிப்பிட்டார்.

மித்ரா ஆதரவில் நடைபெற்ற இந்த தமிழர் திருநாள் கலைவிழா நிகழ்வை உருமிமேள இசை இயக்கத்தின் ஆலோசகர் கவிமாறன் அறிவிப்பு செய்து வழிநடத்தினார்.  தமிழர் பாரம்பரிய கலைகளுக்கு உயிரோட்டம் வழங்கும் வகையில் தமிழர் திருநாள் நடத்தப்பட்டது. இதில் நமது தமிழர் பாரம்பரிய கலைகளான பொய்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பம், உருமிமேள இசை, பறை இசை உள்ளிட்ட பல பாரம்பரிய கலாச்சார கலைகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மித்ரா தலைமை இயக்குநர் லெட்சுமணன், செனட்டர் சுரேஷ் சிங் முக்கியப் பிரமுகர்களாக கலந்து கொண்டனர். இதில் உரையாற்றிய லெட்சுமணன் உருமிமேள இசை இளைஞர்களின் செயல்பாட்டுக்கு உதவும் என்பதால் மித்ரா வழி உதவிகள் வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

இதில் உருமிமேள கலைஞர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உருமிமேள கலைஞர்கள், பொதுமக்கள் என்று சுமார் 800 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments