பாலர் பள்ளி ஆசிரியர் சம்பளப் பிரச்சினை பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் ‘மித்ரா’ தீவிர முயற்சி - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

பாலர் பள்ளி ஆசிரியர் சம்பளப் பிரச்சினை
பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் ‘மித்ரா’ தீவிர முயற்சி
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, மே 27-
பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் குறித்த சிக்கலில் ‘மித்ரா’ அமைப்பிற்கோ அல்லது எனக்கோ கடுகளவும் அலட்சியம் இல்லை என்று பிரதமர்  துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அதேவேளை, கடந்த முறை தேசிய முன்னணி ஆட்சி காலத்தின்போது ஒதுக்கப்பட்ட மானியங்கள் தவறாகக் கையாளப்பட்ட நிலையில் தற்போதைய  நிருவாகம் எந்த நிதி ஒதுக்கீடாக இருந்தாலும் துருவி விசாரித்தும் போதுமான விவரங்களைக் கேட்டும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாலர் பள்ளி ஆசிரியர் சம்பளம் குறித்து சமூக மட்டத்திலும் ஊடகங்களிலும்
தகவல் வெளியாகும் பொழுதெல்லாம், ‘சனவரி மாதத்தில் இருந்து சம்பளம்’ இல்லை என்று பொத்தாம் பொதுவாக குறிப்பிடப்படுகிறதே அன்றி, நிதி அமைச்சின் ஒப்புதலுக்காக மித்ரா காத்திருப்பதைப் பற்றி ஒருவரும் பொருட்படுத்துவதில்லை.

கடந்த ஆட்சியில் இருந்ததைப் போல அல்லாமல் எதையும் முறையாக செய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கைக் கூட்டணி அரசின் நிருவாக இயந்திரம், குறிப்பாக நிதித் துறை கவனமாக இருக்கிறது.

நாட்டில் உள்ள பாலர் பள்ளிகள் கல்வி அமைச்சின்கீழ் பதிந்திருக்க வேண்டும்; குறிப்பாக பாலர் பள்ளி இயங்குகின்ற கட்டடம் வட்டார நகராண்மைக் கழகத்திடமும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிடமும் பதிந்திருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இதற்கிடையில், நாட்டில் இந்திய சமுதாய பாலர் பள்ளிகளை நடத்தும் வட மலேசிய பாலர் பள்ளி ஆசிரியர் சங்கம், சைல்ட் அமைப்பு, தெய்வீக வாழ்க்கைச் சங்கம், மலேசிய இந்து சங்கம், சிறார் மேம்பாட்டு மைய ஒன்றியம்(பிபிபிகேகேசி) ஆகிய முக்கியமான அமைப்புகளால் நடத்தப்படும் 204 பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர் குறித்த இறுதித் தகவல் ஏப்ரல் மாத இரண்டாவது வாரத்தில்தான் கிடைத்தது. அதன் பின்னர் மித்ரா சார்பில் உரிய நடவடிக்கைகள் உடனே முடுக்கி விடப்பட்டன.

ஆகவே, சம்பந்தப்பட்ட பாலர் வகுப்பு ஆசிரியர்களின் சம்பள நிலைமையையும் பாலர் வகுப்பு நடத்துவோரின் சங்கடத்தையும் முழுதாக உணர்ந்திருப்பதாகவும் கூடிய விரைவில் அனைத்திற்கும் சுமூகமான தீர்வு ஏற்படும் என்றும் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments