"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" தந்தையின் தியாகத்தை என்றும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தந்தையர் தின வாழ்த்து

"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை"
தந்தையின் தியாகத்தை  என்றும்
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தந்தையர் தின வாழ்த்து

கோலாலம்பூர்,ஜூன் 15-
ஒரு தந்தையின் தியாகத்திற்கு ஈடுஇணையில்லை. "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்பதால் பிள்ளைகள் தந்தையின் தியாகத்தை என்றும்  போற்ற வேண்டும் என்று  ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தந்தையர் தின வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தாய் தன்   பிள்ளையை நெஞ்சுக்குள் சுமந்து அரவணைத்து பாசத்தை காட்டுகிறாள். ஆனால், தந்தையோ தன் தோளில் சுமந்து உலகத்தை காட்டுகிறார். தந்தையின் தியாகத்திற்கு ஈடு செய்ய வேண்டும் என்று நினைக்கும் பிள்ளைகள் தந்தையின் தியாகத்தை என்றும் போற்ற வேண்டும்  என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

தாய் தன் பிள்ளை மீதான பாசத்தை. வெளிக்காட்டி விடுவாள். ஆனால், தந்தையோ பாசத்தை மனத்திற்குள் வைத்து கண்டிப்பை உதட்டிற்குள் வைத்திருப்பார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். தந்தை தன் பிள்ளைக்கு வழங்கும் உபதேசம் அவனை உச்சிக்குக் கொண்டு செல்லும் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

வீட்டில் அப்பா எப்போதும் கடுகடுவென்று இருந்தாலும் அவரது கண்டிப்பு பிள்ளைகளை குறிப்பாக ஆண்பிள்ளைகளை நல்வழிக்கு கொண்டு செல்லும். பிள்ளையை அடித்த தாய் சில நிமிடங்களில் வாரி அணைத்து விடுவாள். ஆனால், மகனை தண்டித்த தந்தை எதையும் காட்டிக் கொள்ளாமல் கடுகடுவென்று இருந்தாலும் மகன் தூங்கிய பிறகு அவனை வருடி கண்ணீர் சிந்தும் தந்தையின் தியாகத்திற்கு ஈடுஇணை இல்லை.

இந்த உலகத்தில் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒரு தந்தையின் தியாகத்தை எப்போதும் மதிக்க வேண்டும். தன் தந்தை காட்டிய வழியில் பிள்ளைகள் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments