எவ்வளவு உயர்ந்தாலும் மரத்தைத் தாங்குவது மண்தான் - டத்தோ கிளி இரத்தினராஜ்

எவ்வளவு  உயர்ந்தாலும் மரத்தைத் தாங்குவது மண்தான்
- டத்தோ கிளி இரத்தினராஜ்

கோலாலம்பூர்,ஜூன் 30-
மரம் என்னதான் வானளவு உயர்ந்தாலும் அதைத் தாங்குவது என்னவோ மண் மாதாதான். அதைப்போல நம் மாணவர்கள் கல்வியிலும் வாழ்க்கையிலும் எவ்வளவு உயர்ந்தாலும் அத்தனைக்கும் ஆதாரமும் அடிப்படையும் பெற்றோர் என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் சார்பில் எஸ்பிஎம் 2018 தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்களிப்பு நிதி வழங்கிய நிகழ்ச்சியில் தேசிய நில நில கூட்டுறவு சங்க நிர்வாகச் செயலாளர் டத்தோ கிளி இரத்தினராஜ் சோமசுந்தரம் தெரிவித்தார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

கூட்டுறவு சங்க அங்கத்தினர்களின் பிள்ளைகள் இவ்வாறு வெகுமதி அளித்து ஊக்குவிக்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க ஆண்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது.

கூட்டுறவு சங்க தோற்றுநர் துன் வீ.தி. சம்பந்தன் பிறந்த நாளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டும் கூட்டுறவு சங்கத் தலைவர் ‘கூட்டுறவுக் காவலரும் இலக்கியக் காவலருமான’ டான்ஸ்ரீ கே.ஆர்.சோம சுந்தரம் தலைமையில் தோட்ட மாளிகையில் அண்மையில்  நடைபெற்றது.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் வரவேற்புரையை தொடர்ந்து தலைமை ஆற்றிய டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், “கல்வியில் சிறந்த மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தவும் வீட்டில் இருக்கும் இளைய பிள்ளைகளுக்கும் உந்துதலை அளிக்கவும் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது” என்றார்.

தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் ஊக்கத் தொகை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இப்போது, நூற்றுக் கணக்கில் வளர்ந்துவிட்டது. இந்த ஆண்டு 271 மாணவர்கள் கூட்டுறவு சங்கத்தின் ஊக்கத் தொகையைப் பெறத் தகுதி பெற்றுள்ள நிலையில், இவர்களில் 157 மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் தங்களின் கல்வியைத் தொடர்ந்தவர்கள் என்று டான்ஸ்ரீ சோமா அறிவித்தார்.

எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு 1700 வெள்ளியும் எஸ்பிஎம் மாணவர்களுக்கு 1,200 வெள்ளியும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் அதேவேளை, ரவாங்கைச் சேர்ந்த ஸ்ரீதரன் காளிராஜன் 12ஏ+ பெற்று தங்கப் பதக்கத்தையும் தட்டிச் செல்வதாக டான்ஸ்ரீ சோம சுந்தரம் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய கூட்டுறவு சங்க தலைமை நிர்வாகி டத்தோ கிளி இரத்தினராஜ், மாணவர்கள் தங்களின் கல்விக்காக அதிகமாக தியாகம் செய்யும் பெற்றோரையும் கற்பிக்கும் ஆசிரியர்களையும் எந்த நேரமும் மறக்கக்கூடாது என்றார்.

Comments