விளையாட்டு உலகில் மலேசியப் புகழை நிலைநாட்டியவர் லீ சோங் வெய் - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி புகழாரம்

விளையாட்டு உலகில் மலேசியப் புகழை நிலைநாட்டியவர் லீ சோங் வெய்
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி புகழாரம்

கோலாலம்பூர்,ஜூன் 15-
உலக விளையாட்டு அரங்கில் மலேசியாவின் புகழை நிலைநாட்டியவர் பூப்பந்து வீரர் டத்தோ லீ சோங் வெய் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி புகழாரம் சூட்டினார்.

விளையாட்டுத் துறைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கோண்ட லீ சோங் வெய், உடல் நல சிக்கல் காரணமாக ஓய்வு பெற்றுக் கொண்டதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.


ADVERTISEMENT ADVERTISEMENT
இருந்தபோதும், மலேசிய விளையாட்டுத் துறைக்கு இது இழப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. உலக பூப்பந்து அரங்கில் நீண்ட காலம் முதல் தர விளையாட்டாளராக நிலைபெற்று இருந்த லீ சோங் வெய், நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்தவர்.

சிறு வயது முதற்கொண்டே பூப்பந்து விளையாட்டில் தீவிர நாட்டம் காட்டி வந்த அவர், அந்தத் துறையில் சாதித்தும் காட்டினார். இளம் விளையாட்டாளர்களுக்கும் மலேசிய இளைஞர்களுக்கும் முன்மாதியாக விளங்கும் லீ சோங் வெய், நாட்டிற்கு, குறிப்பாக பூப்பந்துத் துறைக்கு ஆற்றிய சேவை என்றென்றும் அவரின் பெயரை நிலை நிறுத்தும் என்பதில் ஐயமில்லை என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments