சங்கநதியில் சரித்திர புகழுடன் மக்கள் மனதில் வாழ்கிறார் துன் சம்பந்தன்

சங்கநதியில் சரித்திர புகழுடன் மக்கள் மனதில் வாழ்கிறார் துன் சம்பந்தன்
 கி.மணிமாறன்,
 சுங்கை சிப்புட்

சுங்கை சிப்புட்,ஜூன் 15- சஞ்சிக்கூலிகளாக கொண்டு வரப்பட்ட தமிழினத்தை தோட்டங்களுக்கு
உரிமையாளர்களாக்கிய மாபெரும் வரலாற்று நாயகனாக மறைந்து 40 ஆண்டுகளை எட்டியும் மலேசிய இந்தியர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து வருகிறார் துன் வி.தி
சம்பந்தன்.
"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர்
யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர், சரித்திர தனிலே நிற்கின்றார்" எனும்
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்த காலத்தில் மக்கள் மனங்களில்
இடம்பிடித்த துன் சம்பந்தன் இன்னமும் காலத்தால் மறக்க முடியாத
தலைவராக விளங்கி வருகிறார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

சங்கநதியில் சரித்திர புகழுடன் உறங்குகிறார் துன் சம்பந்தன். அவர் சரித்திர புகழுடன்
வாழ்கிறார் என்பதை நம் தலைமுறைகள் காலம் கடந்தும் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.

மலேசியாவின் சுதந்திர பிரகடனத்தில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்து
கையொப்பம் இட்ட பெருமை இவரையே சாரும். வாழ்ந்த காலத்தில்
சமூகத்திற்காக சிந்தித்த துன் சம்பந்தன் மறைந்தும் கூட இந்திய சமூகத்தின்
முகவரியாய் விளங்குகிறார்.
தோட்டத் துண்டாடலில் தோட்டங்களை விட்டு நாடோடியாய் பரிதவித்த இந்திய சமூகத்திடம் பத்து பத்து வெள்ளியாய் வசூல் செய்து
முதலாளிகளாய் உருமாற்றிய சமுதாய சிந்தனையாளராய் அன்றே உருவெடுத்த துன் சம்பந்தன் “நாம் ஏழைகள் ஆனாலும், கோழைகள் அல்ல"
என்ற தாரகமந்திரத்தை
எடுத்துரைத்து கூட்டுறவு தத்துவத்தினை விளக்கி
அதன் மூலம் சிறுக சிறுக சேமித்து தோட்டங்ககள வாங்கினார்.

அன்று துன் சம்பந்தன் விதைத்த விதைதான் இன்று இந்தியர்களுக்கு என தோட்டங்கள் பெருமைமிகு அடையாளத்தோடு விளங்குவது மட்டுமின்றி
கோலாலம்பூரில் வானளாவிய உயரத்தில் எழுந்து நிற்கும் விஸ்மா துன்
சம்பந்தனும் அந்த வானுயர பெருமையில் இடம் பிடித்துள்ளது.
தன் இனத்தின் குரலாக வாழ்ந்து மறைந்த துன் சம்பந்தன் 16 ஜூன் 1919இல் பிறந்தார். கடந்த 18 மே 1979இல் மண்ணை விட்டு
மறைந்து மக்களின் மனங்களில் இன்னமும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் 1955இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் ம.இ.காவின் சார்பில் கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துன் சம்பந்தன் தொழிலாளர்அமைச்சராக பதவியேற்றார்.

தனது 36ஆவது வயதில் மலேசிய இந்தியர்களின் குரலாக ஒலித்த ம.இ.காவிற்கு தலைமையேற்ற துன் சம்பந்தன் நாட்டின் வளர்ச்சியில் இந்திய சமூகம் எச்சூழலிலும் விடுபட்டுவிடாமல் தொடர்ந்து முன்னேற
அரும்பாடுப்பட்டார்.

பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்காக
சேவையாற்றி ஏழையாக அரசியல் களத்திலிருந்து விலகிச் சென்ற துன் சம்பந்தன் மலேசிய காமராசர் என்றும் போற்றப்படுகிறார்.
மலேசியாவின் உயரிய விருதான “துன்” விருதை பெற்ற முதல் மலேசிய
தமிழரான துன் சம்பந்தன் மலேசிய அரசாங்கத்தில் தொழிலாளர்
அமைச்சர், சுகாதார அமைச்சர், பொதுப்பணி, அஞ்சல், தந்தித்துறை மற்றும்
ஒற்றுமைத் துறை அமைச்சர் என பல அமைச்சகத்தில் பணியாற்றிய பெரும்
சேவகனாய் வாழ்ந்தார்.
சுங்கை சிப்புட்டில் 1954இல் மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியை நிறுவிய இவர் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இந்திய சமூகத்தை உயர்த்துவதில் தனி கவனம் செலுத்தினார்.
இந்தியர்களின்
சொத்துடைமை ஆரோக்கியமான சூழலில் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு
முயற்சிககள ஆக்கப்பூர்வமாக அவர் மேற்கொண்டார்.
மலாயாவிற்கு சுதந்திரம் கிடைக்கப் போகிறது எனும் விடுதலை வேட்கையும்
சுதந்திர தாகமும் நாட்டில் உயிர்த்தெழுந்து கொண்ருந்த நேரம் அது. நாடே
மலாயாவின் சுதந்திர தாகத்தில் மூழ்கியிருந்த காலக்கட்டத்தில்கூட சுங்கை
சிப்புட்டில் மகாத்மா காந்தி கலாசாலையை அமைக்கும் அரும்பணியில் துன்
சம்பந்தன் ஆக்கப்பூர்வமாக இயங்கிக் கொண்டிருந்தார்.
அப்பள்ளிக்கூடத்தை எழுப்பியதோடு மட்டுமின்றி இந்தியாவோடு
தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி குறிப்பாக அன்றைய பிரதமர்
நேருவுடன் இருந்த அணுக்கமான நட்பை மெய்பித்து அவரது தங்கையும்
அப்போதைய ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைவராக பதவி வகித்த விஜயலெட்சுமி பண்டிட்டை மலாயாவிற்கு வரவழைத்து
அப்பள்ளியை திறந்து வைக்கவும் செய்தார்.
துன் சம்பந்தன் புகழ் அழியா வண்ணம் அவரது நினைவாக கோலாலம்பூர்
பிரிக்பீல்ட்ஸ்சில் ஒரு சாலைக்கு “ஜாலான் துன் சம்பந்தன்” என்றும் தோட்ட மக்களுக்காக நிறுவப்பட்ட கட்டடத்திற்கு விஸ்மா துன்
சம்பந்தன் என்றும், ஈப்போவில் ஜாலான் துன் சம்பந்தன், புந்தோங்கில் “புலாத்தான் துன்
சம்பந்தன்” மட்டுமின்றி நாட்டில் அவர் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும்
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிகள் என அனைத்தும் அவரது தியாகத்தையும் புகழையும் உயர்த்திக் கொண்டிருக்கிறது.
இன்றைய நவீன அரசியலில் விளம்பரத்திற்காகவும் பத்திரிகை
செய்திகளுக்காகவும் வேட்டி ஜிப்பாவுடன் சட்டமன்றம்
நாடாளுமன்றங்களுக்கு செல்லும் மாண்புமிகுகளுக்கு மத்தியில் அமைச்சராக
பதவியேற்ற பின்னரும் வேட்டி ஜிப்பாவுடம் தனது பணியை மேற்கொண்ட
அவர் வேட்டி ஜிப்பா அணிவதை தனது பாரம்பரியமாக தொடர்ந்து
கடைபிடித்து வந்தார்.
 மலேசியாவின் சுதந்திர ஒப்பந்தத்தில் துன் சம்பந்தனின் கையொப்பமும்
உள்ளது என்பது மலேசிய தமிழர்களுக்கு பெருமையான ஒன்றாக
அமைந்துள்ள நிலையில் மலேசிய தமிழர்களை ம.இ.காவில் முக்கிய
இடத்தில் உயர்த்தி வைத்த பெருமையும் துன் சம்பந்தனையே சாரும்.

இந்நாட்டின் தமிழர்களை முழுமையாக ஒன்றிணைத்த
பெருமையில் துன் சம்பந்தனின் செயல்பாடும் தனி சிறப்பு பெறுகிறது.
இந்தியர்களின் அடையாளமாக 1960ஆம் ஆண்டில் துன் சம்பந்தன் உருவாக்கிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 1970ஆம் ஆண்டுகளில்
ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு சங்கமாய் விளங்கி வருகிறது. துன் சம்பந்தன் அவர்கள் மறைந்த 1979ஆம் ஆண்டில்
இச்சங்கத்தின் கீழ் 18 ரப்பர் தோட்டங்கள் இந்தியர்களின் சொத்தாக
விளங்கின.

இதில் சுமார் 85,000 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்துள்ளனர் என்பது வரலாறு.
துன் சம்பந்தன் மலேசியாவின் வரலாற்றில் மறக்க
முடியாத மனிதர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”
எனும் குறளுக்கு ஒப்ப வாழ்ந்து மறைந்த துன் சம்பந்தன் இன்றைக்கும்
மக்களின் மனங்களில் மாமனிதராக வாழ்ந்துக்
கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments