குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹாஸிக் கட்சியில் இருந்து நீக்கப்படாதது ஏன்? - ஜூரைடா கமாருடின் கேள்வி

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹாஸிக்
கட்சியில் இருந்து நீக்கப்படாதது ஏன்?
- ஜூரைடா கமாருடின் கேள்வி


கோலாலம்பூர்,ஜூன் 20-
டத்தோஸ்ரீ அஸ்மின் அலியைத் தொடர்புபடுத்தும் ஆபாச காணொளி விவகாரம் குறித்த கட்சித் தலைவர்கள் சிலரின் நிலைப்பாடு மற்றும் இதனைக் கையாளும் விதம் தனக்கு பெரிய அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துவதாக கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஜூரைடா கமாருடின் கூறினார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

அந்த காணொளியில் இருப்பது தாம்தான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ள ஹாஸிக் மீது கட்சி தலைமைத்துவமும் அவரது முதலாளியான துணையமைச்சரும் ஏன் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் வினவினார்.
குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள ஹாஸிக்கின் வாக்குமூலமே அவரைக் கட்சியில் இருந்து விலக்குவதற்கு போதுமானது என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு தரப்பு தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்துள்ளதோடு காவல் துறையிடமும் இது குறித்து புகார் செய்துள்ளது. இந்த நிலையில், புலன் விசாரணை முடிவிற்காக காத்திருப்பது நியாயமாகும் என்று ஜூரைடா தெரிவித்தார்.
குற்றம் புரிந்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத தலைமைத்துவத்தின் மெத்தனப் போக்கானது, இந்த விவகாரத்தில் சில மர்மமான கரங்கள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்ற கருத்தினை வலுப்படுத்துவதாக உள்ளது. இதன் மூலம் கட்சியின் தலைமைக்கும் மத்திய, மாநில நிலையிலான பதவிகளுக்குத் தேர்வு பெற்றவர்கள் மறுமலர்ச்சி என்பதற்கான அர்த்தம் புரியாதவர்களாகவும் சந்தேகத்திற்குரிய பின்னணியைக் கொண்டுள்ளவர்களாக இருப்பர் என்று எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் மேலும் சில கட்சித் தலைவர்களின் பெயர்களையும் ஹாஸிக் தொடர்புபடுத்தியிருப்பதால், கட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பெரும் பாதிப்பு இதனால் ஏற்படக்கூடும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
எனவே, இந்த காணொளியின் நம்பகத்தன்மை குறித்து முழு அளவிலான விசாரணை துரித நிலையில் நடைபெற வேண்டியது அவசியமாகும்.
ஏனெனில் இந்த விவகாரத்தால் நாட்டிற்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில், இந்த அரசியல் சூழ்ச்சியானது நாட்டின் மறுமலர்ச்சி திட்டங்களுக்கு இடையூறையே ஏற்படுத்தும். மேலும் இது மக்களுக்கு உதவும் பக்காத்தான் அரசாங்கத்தின் நோக்கத்தையும் பாதிக்கும் என்றார் அவர்.
நாளை நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்தில் இந்த விவகாரம் மீதான தனது நிலைப்பாட்டை தான் வெளிப்படுத்தவிருப்பதோடு கட்சியின் நடவடிக்கை குறித்த விளக்கத்தையும் கோரவிருப்பதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சருமான ஜூரைடா கமாருடின் தெரிவித்தார்.

Comments