மக்களை இணைப்பது பண்டிகைகள்! ஈகைத் திருநாளை ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுவோம் - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

மக்களை இணைப்பது பண்டிகைகள்!
ஈகைத் திருநாளை ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுவோம்
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, ஜுன் 4-
மக்களை இணைப்பது பண்டிகைகள்தான் என்பதால் நோன்புப் பெருநாளை ஒற்றுமை திருநாளாகக் கொண்டாடுவோம் என்று பிரதமர் துறை அமைச்சர் நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய மக்கள் அனைவருக்-கும் பிரதமர் துறை அமைச்சகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக பொன்.வேதமுர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசியத் திருநாட்டின் கூட்டு சமுதாயத்தை பிணைத்திருக்கும் கயிறுகளைப் போன்றவை பண்டிகைகள் ஆகும். அதனால்தான், எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அனைத்து மக்களும் இனம், மொழி, சமயம் கடந்து ஒன்றாகக் கொண்டாடி ஒருமைப்பாட்டை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தற்பொழுது நோன்புத் திருநாள் கொண்டாட்டம் நம்மையெல்லாம் சூழ்ந்துள்ளது.

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் (ரமலான்) முழுவதும் நோன்பிருந்து, ஷவ்வால் மாதம் பிறக்கின்ற இவ்வேளையில் நோன்புத் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இந்த நோன்பு காலத்தில் பசித்திருந்து, பிறர் துன்பம் உணர்ந்து, நன்னெறிச் சிந்தனைக்கு முன்னுரிமை அளித்து, அதிக நேரத்தை இறை வணக்கத்திற்காக ஒதுக்கி, முடிந்தவரை நலிந்தோருக்கு உதவிக் கரம் நீட்டி மாந்த நேயத்தை வளர்க்கும் விழாவாக இந்த நோன்புத் திருநாள் மலர்ந்துள்ளது.

இந்த நோன்புப் பண்டிகையை சிக்கனமாகவும் அதேவேளை சிறப்பாக-வும் கொண்டாடி மகிழ வேண்டும். அத்துடன், மற்ற இன மக்களையும் அண்டை அயலாரையும் இணைத்துக் கொண்டு நாட்டு ஒற்றுமைக்-கும் ஒருமைப்பாட்டிற்கும் வலுசேர்க்கும்படி இத்திருநாளை அனுசரிக்கும்படி அனைவரையும் அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, விழாக் காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் திரும்பும் பொழுதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்படி நாட்டு மக்கள் அனைவரையும் வேண்டுவதாக தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன். வேதமூர்த்தி வெளியிட்ட நோன்புத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments