குப்பைகளை அகற்றுவோம்! செந்தோசாவை பசுமை இடமாக மாற்றுவோம்! சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கோரிக்கை

குப்பைகளை அகற்றுவோம்! செந்தோசாவை பசுமை இடமாக மாற்றுவோம்!
சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கோரிக்கை

குணாளன் மணியம்

கிள்ளான், ஜூன் 20-
குப்பைகளை அகற்றி செந்தோசாவை பசுமை இடமாக மாற்றுவோம் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

செந்தோசா சட்டமன்றத்தில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சினைக்கு பொறுப்பற்ற மக்கள் சிலர்தான் காரணம் என்று கிள்ளான் செந்தோசா சட்டமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குணராஜ் கூறினார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதுபோலவே நாட்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் கிள்ளான் செந்தோசாவில் ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுகின்றன. இதனை மக்கள்தான் மாற்றியமைக்க வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

செந்தோசா பகுதியில் குப்பைகள் வீசப்படும் இடங்களை அடையாளம் கண்டு அதனை அகற்றி அங்கு மரங்கள் நட்டு பசுமை இடமாக மாற்றி வருகிறோம். இம்முயற்சிக்கு அரசு சாரா இயக்கங்கள், கிள்ளான் மாநகர மன்றம் உள்ளிட்ட பலர் கைகொடுத்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுத்தம் - பசுமை திட்டத்தை செந்தோசாவில்  தொடங்கினோம். இதன் வழி குப்பைகள் நிறைந்த பகுதிகளை சுத்தமாக்கி மரங்கள் நட்டு பசுமையாக்கி வருகிறோம். இதனை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.குப்பைகளை வீட்டு குப்பைத் தொட்டியில் போடுங்கள். அது உரிய இடத்திற்கு சென்று சேர்ந்துவிடும். செந்தோசா சுத்தமாகவும் பசுமையாகவும் இருக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குணராஜ் வலியுறுத்தினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் அரசு சாரா இயக்கங்கள், கிள்ளான் மாநகர் மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Comments