அனைவரும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது - அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

அனைவரும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

கோத்தா சமரஹான், ஜூலை21:
பரஸ்பர மதிப்பு, ஒருவருக்கொருவர் தோள் கொடுத்தல் ஆகிய பண்பு நலனால் சரவாக் மாநிலம் நாட்டிற்கே தக்க சான்றாக விளங்குகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

பொதுவாக சபா, சரவாக் மக்கள் போற்றும் சமய நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமைக் கூறு ஆகிய தன்மைகளை தீபகற்ப மலேசிய மக்களும் பின்பற்ற வேண்டும்.
சரவாக் மக்கள் பல்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் ஒன்றாக அமர்கின்றனர்; ஒன்றாக உண்கின்றனர்.; மற்றவர்களின் சமய - பண்பாட்டு விழாக்களை எல்லோருமாக ஒன்றுகூடி கொண்டாடி ஒற்றுமை உணர்வை நிலை நாட்டுகின்றனர் என்று இங்குள்ள சிவிக் மையத்தில் தேச ஒற்றுமை விழாவைத் தொடக்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்தபோது  அமைச்சர் அவ்வாறு சொன்னார்.

தீபகற்ப மலேசியாவைப் பொறுத்தவரை சுயநல அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற ஒருசில அமைப்புகளும் கூட்டு சேர்ந்து இன மற்றும் சமய பிரச்னைகளை எழுப்புகின்றனர்.


இதுபோன்ற குறுகிய மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டு நலனை முன்வைத்து  நாம் அனைவரும் ஒன்றுபட்டு கைகோர்க்க வேண்டிய அருந்தருணமிது.

தனிப்பட்டவர்களின் நலனைவிட நாட்டு நலன் முக்கியம். நாட்டில் ஒற்றுமை சிறப்புற்றால் அந்நிய முதலீடுகள் பெருகும். அதனால், பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் அதிகமாகும்.


எனவே, இன-சமய வேற்பாட்டை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் அனைவருக்கும் வேண்டும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார்.


Comments