மித்ராவின் கதவுகள் எல்லாத் தரப்பினருக்கும் திறந்திருக்கின்றன

மித்ராவின் கதவுகள் எல்லாத் தரப்பினருக்கும் திறந்திருக்கின்றன
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர், ஆக.3-
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியில் செயல்படுகின்ற இந்திய சமுதாய உருமாற்றப் பிரிவான மித்ரா, எல்லாத் தரப்பினருக்கும் பொதுவானது என்பதால், மலேசிய இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் அனைத்து அரசு சார்பற்ற இயக்கத்தினரும் மித்ராவை நாடலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

மித்ராவின் உதவியை நாடுவதில் யாருக்கும் எந்தத் தரப்பினருக்கும் தயக்கம் வேண்டாம். அதேவேளை, மித்ரா என்பது பிரதமர் துறை பொறுப்பாண்மையின் கீழும் அதன் கண்காணிப்பிலும் உள்ள ஒரு சிறு பிரிவு என்பதால், பொது மக்களுக்கு நேரடியாக நிதி பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பும் வழிகாட்டியும் மித்ரா கட்டமைப்பில் இல்லை. அதனால்தான் ‘மைக்ரோசொஃப்ட்’ போன்ற பன்னாட்டு துறைசார் வல்லுநர் அமைப்புகளுடன் மித்ரா இணைந்து செயல்படுகிறது

ஓர் அமைச்சகம் என்றால் பொதுமக்களுக்கு நேரடியாக நிதியோ அல்லது மானியமோ வழங்கிட வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சு என்றால், ஒரு விவசாயிக்கு நேரடியாக நிதி வழங்க முடியும். ஆனால், மித்ரா போன்ற சிறிய அமைப்பினால் அவ்வாறு இயலாது.

கல்வி மற்றும் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் இளந்தொழில் முனைவோருக்கான பட்டறை, சமூக மேம்பாடு மற்றும் உருமாற்றம், அடையாள ஆவணம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான அனைத்து சிக்கலுக்கும் முடிந்தவரை தீர்வு காண மித்ரா விரும்புகிறது. பிரதமர் துன் மகாதீரின் விருப்பத்திற்கு ஏற்ப தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறையின் பெருவிருப்பமும் அதுதான்.

எனவே, இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு சார்பற்ற அனைத்து இயக்கங்களின் பொறுப்பாளர்களும் மித்ராவை நாடலாம் என்று செனட்டரும் எம்.ஏ.பி. கட்சியின் தலைவருமான பொன்.வேதமுர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments