சமுதாயத்தைக் காக்க இளைஞர் சமுதாயம் பொறுப்பேற்க வேண்டும் -பொன். வேதமூர்த்தி

சமுதாயத்தைக் காக்க இளைஞர் சமுதாயம் பொறுப்பேற்க வேண்டும்
-பொன். வேதமூர்த்தி

செனாவாங், செப்.10-
நாளைய உலகம் இளைஞர்களின் கைகளில்தான் அடங்கி உள்ளது. அதனால், சமுதாயத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்க இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

‘இந்திய சமுதாயத்தின் எதிர்காலம் மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்.ஏ.பி.)யுடன்’ என்னும் கருப்பொருளுடன் நெகிரி மாநிலம், செனாவாங் நகரில் சுற்று வட்டார இந்திய சமுதாயத்தினர் எம்.ஏ.பி.கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தலைமையில் செப்டம்பர் 9-ஆம் நாள் ஒன்று திரண்டனர்.

அப்போது பேசிய ஒற்றுமைத் துறை அமைச்சருமான அவர், நம்மிடையே புதிய அரசியல் சிந்தனை மலர வேண்டும். நம் மக்களைக் காக்கவும் உதவிக்கரம் நீட்டவும் இன்னொரு தரப்பினர் முன் வருவார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதில் பயனில்லை. அதனால், அந்தப் பொறுப்பை ஏற்க நாமே அணியமாக வேண்டும் என்று ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் குறிப்பிட்டார்.

அரசியலில் தூய்மைத் தன்மை குறைவாக இருக்கலாம்; அதற்காக, அனைவரும் அதில் இருந்து விலகி நிற்பதாலும் ஒன்றும் விளையப் போவதில்லை. எனவே, தியாகத்திற்கு துணிந்து சேவை செய்யும் எண்ணத்துடன் முன்வரும் நல்ல உள்ளத்தினரால்தான் இந்த உலகம் பயனையும். மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் அவ்வாறு முன் வந்ததால்தான் உலக மக்கள் பயனடைய முடிந்தது.

எனவே, மலேசிய அரசியல் வானில் புதிதாக தோன்றியுள்ள மலேசிய முன்னேற்றக் கட்சியில் இணைய அற்பணிப்பு உணர்வு உள்ளவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Comments