செலத்தார் பூர்வகுடி மக்கள் நில வழக்கு பொன்.வேதமூர்த்தி சமரசம்

செலத்தார் பூர்வகுடி மக்கள் நில வழக்கு
பொன்.வேதமூர்த்தி சமரசம்

புத்ராஜெயா, செப்.13-
தென் ஜோகூர், செலத்தார் பகுதியைச் சேர்ந்த பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நில உரிமை சம்பந்தப்பட்ட வழக்கு ஒரு சமரச நிலையை எட்டுகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில அரசு, மத்தியக் கூட்டரசு, மேம்பாட்டாளர் ஆகிய முத்தரப்பினர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு 2012-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்பொழுது மேல்முறையீட்டு நீதிமன்றத்தை எட்டியுள்ள இந்த வழக்கில் எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற பொருத்தமான சமரசத் தீர்வை எட்டுவதற்கு ’JAKOA’ எனப்படும் பூர்வகுடி மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பாக இருக்கும் பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி இசைவு கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில், பாக்கார் பத்து பூர்வகுடி கிராமம், சுங்கை தெமோன் கிராமம் ஆகிய பகுதிகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், நீண்ட காலம் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பல சிக்கல்களுக்கு சில பரஸ்பர விட்டுக் கொடுத்தல் மூலம் சமரசம் பிறந்துள்ளது.

இதன் தொடர்பில், முதல் சமரசக் கூட்டம் 10-9-2019 செவ்வாய்க் கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்றது. இதில், ஜோகூர் நிலம் மற்றும் சுரங்கத்துறை, ஜோகூர் மாநில சட்ட ஆலோசகர் அலுவலகம், செலெத்தார் பூர்வகுடி மக்களின் வழக்கறிஞர் நிறுவனங்களான ஸ்டீவன் திரு & சுதர் பார்ட்னர்ஷிஃப் மற்றும் கே.மோகன் & கோ ஆகியவாற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, அடுத்தக் கட்டமாக எடுக்க வேண்டிய சில நடவடிக்கையும் அடையாளம் காணப்பட்டன; எனவே, எல்லாத் தரப்பினருக்கும் இசைவான நல்ல தீர்வு விரைவில் எட்டப்படும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments