நண்டு கதையை மீண்டும் அரங்கேற்றும் ஒரு ஊடகங்களை சமுதாயம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் ஹிண்ட்ராஃப் பொறுப்பாளர் மணிமாறன் வேண்டுகோள்

நண்டு கதையை மீண்டும் அரங்கேற்றும் ஒரு ஊடகங்களை
சமுதாயம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்
ஹிண்ட்ராஃப் பொறுப்பாளர் மணிமாறன் வேண்டுகோள்

கோலாலம்பூர், செப்.09-
ஹிண்ட்ராஃப் நிதி தொடர்பான கணக்கறிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பே தணிக்கை செய்யப்பட்டு விட்டது. இதை இந்திய சமுதாயமும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு விட்டன. இப்போது, புதுக் குழப்பம் ஏற்படுத்த ஒரு ஊடகம் தூபம் இடுகிறது என்று ஹிண்ட்ராஃப் தேசியப் பொருளாளர் சி. மணிமாறன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிண்ட்ராஃப் நிதி குறித்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இப்பொழுது கேள்வி எழுப்பும் தரப்பினர் யார் என்பதை  சமுதாயத்திற்குச் சொல்லாமல் இரட்டடிப்பு செய்வது ஏன்? யாருடைய கைப்பாவையாக இந்த ஊடகம் செயல்படுகிறது? அல்லது மற்றவர்களின் பெயரைப் பயன்படுத்தி பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்கு எதிராக இப்படி அக்கப்போரான செய்தியை வெளியிட்டு, இந்த ஊடகம் மீண்டும் நண்டு கதையை அரங்கேற்றுகிறதா என்பதைப் பற்றி தமிழ் வாசர்களும் பொது மக்களும் அடையாளம் காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் துறை அமைச்சர் இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக தொடர்ந்து கடமை ஆற்றிவரும் இந்த நேரத்தில், அந்த தமிழ் ஊடகம் அமைச்சரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறது.

இதில் குறிப்பாக, மித்ரா மூலம் பி-40 இந்திய உயர்க்கல்வி மாணவர்களுக்கு உதவி, குடிமைப் பயிலரங்கம் உள்ளிட்ட சமூக மறுமலர்ச்சித் திட்டங்கள், 12-ஆவது மலேசியத் திட்டத்தின் மூலம் இந்திய சமுதாயத்திற்கான சமூக - பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்பு, பூர்வகுடி மக்களுக்கான நலத்திட்டங்கள் என்றெல்லாம் சேவையில் முனைப்பு காட்டிவரும் அமைச்சரின் பணிகளுக்கு தடை ஏற்படுத்தும் விதமாக அது மீண்டும் கீழறுப்பு  வேலையைத் தொடங்கி  உள்ளது.

ஹிண்ட்ராஃப் இயக்கம் தேசிய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்திய காலக் கட்டத்தில், குறிப்பாக நாட்டின் 12-ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்காக திரண்ட நிதி குறித்து 2010-ஆம் ஆண்டில் முழு தணிக்கை செய்யப்பட்டு விட்டது.

அரசாங்கப் பதிவு பெற்ற பட்டயக் கணக்காளர் நிறுவனமான பத்மராஜா நிறுவனம்தான் அந்த நிதியைத் தணிக்கை செய்தது. அந்த அறிக்கையை 2010-ஆம் ஆண்டில் ஹிண்ட்ராஃப் இயக்கம் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டது. அந்த நாளேடும் அந்த கணக்கறிக்கையை வெளியிட்டு, ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கு இசைவாக அப்போது செயல்பட்டது.

ஓர் அரசு சார்பற்ற நிறுவனம் தன்னுடைய கணக்கறிக்கையை முறையாக தணிக்கை செய்து பகிரங்கமாக வெளியிட்டது என்பது, மலேசிய வரலாற்றில் ஹிண்ட்ராஃப் இயக்கமாகத்தான் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ ஹிஷாமுடின், ஹிண்ட்ராஃப் பொது நிதி பரிவர்த்தனையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரிய வருகிறது என்று நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டதுடன், ஹிண்ட்ராஃப் நிதி தணிக்கை அறிக்கைக்கும் ஒப்புதல் தெரிவித்தார். இதையும் அந்நாளேடு பிரசுரித்தது.

இந்தத் தகவல் அனைத்தையும் இந்திய சமுதாயமும் தமிழ் வாசகர்களும் நன்கு அறிவார்கள். இவ்வளவும் நடைபெற்ற பின், இப்பொழுது ஒன்பது ஆண்டுகள் கழித்து, அந்த நாளேடு ஒன்றும் தெரியாதாதைப் போல பம்மாத்து வேலை காட்டுகிறது. அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்கு எதிரான செய்தியை வெளியிடுவதில் ஆர்வம் அந்நாளேடு, உண்மை வரலாற்றை மறைக்க முயல்கிறது.

அமைச்சார் சார்பில் வெளியிடும் அறிக்கையை இந்த நாளேடு வெளியிடுவதில்லை; தவறாக பிரசுரிக்கும் செய்திகளுக்கான விளக்கத்தையும் அது புறக்கணிக்கிறது. ஆனால், தொடர்ந்து அமைச்சரின் பணிக்கு இடையூறாக செய்தி வெளியிடும் அந்த நாளேட்டை மக்கள் அடியோடு புறக்கணித்து, மற்ற இரு நாளேடுகளை தமிழ் வாசகர்கள் பேரளவில் ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதாக ஹிண்ட்ராஃப் சிலாங்கூர் மாநிலப் பொறுப்பாளருமான சி.மணிமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்

Comments

  1. Jealousy, envy, begrudging. All because of their own inability and incapacitatedness

    ReplyDelete

Post a Comment